போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம் – வாடிகன் நிர்வாகம் அறிவிப்பு !

போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88 வயது), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆன நிலையில், தற்போது வரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவர் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு கத்தோலிக்கர்களை வாடிகன் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் தேவாலயம் வெளியிட்ட அறிக்கையால் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் கவலை அடைந்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.