போப் பிரான்சிஸ் விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான செய்தியை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
போப் பிரான்சிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், வாடிகனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போப் பதவியை தான் ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்றும், போப் பதவியை ராஜினாமா செய்யும் திட்டம் ஏதும் தனக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்த மாதம் கனடா செல்லும் திட்டத்தில் தான் இருப்பதாகவும், அதன்பிறகு, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கும் உக்ரைன் தலைநகர் கீவ்-க்கும் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
புற்றுநோயால் தான் பாதிக்கப்படவில்லை என தெரிவித்த போப் பிரான்சிஸ், தனக்க புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் யாரும் தன்னிடம் கூறவில்லை என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
கருக்கலைப்பு சட்டப்படி குற்றம் என்ற அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆதரித்துப் பேசிய போப் பிரான்சிஸ், கருக்கலைப்பு கண்டிக்கத்தக்கது என்றார்.
தனக்கு கால் முட்டியில் வலி இருப்பதை தெரிவித்த போப் பிரான்சிஸ், இதன் காரணமாக சில பணிகளை செய்ய வேண்டாம் என தான் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.
போப் பதவிக்கான கடமைகளை செய்ய முடியாத அளவுக்கு; வாடிகன் தேவாலயத்தை நிர்வகிக்க முடியாத அளவுக்கு தனது உடல்நிலை பாதிக்கப்படுமானால், அப்போது தனது பதவியை ராஜினாமா நிச்சயம் ராஜினாமா செய்துவிடுவேன் என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.








