தமிழகத்தில் ஜூலை 10ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளதாக நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில்
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு, கடப்பாக்கம், இடைக்கழிநாடு
மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மகப்பேறு, விபத்து
சிகிச்சை உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் மேற்கண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று ஆய்வு
மேற்கொண்டார். இதில், பணியிலிருந்த மருத்துவர்களிடம் கிராம மக்களுக்கு
அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மற்றும் பணியில் உள்ள மருத்துவர்கள்,
செவிலியர்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், நாய்க்கடி மற்றும் பாம்பு கடிக்கு
சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகள், மருத்துவமனையில் உள்ளதா என ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
இடைக்கழிநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஈசிஆர் சாலையோரம் அமைந்துள்ளதால் ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக மேம்படுத்த வேண்டியது அவசிமாகிறது. மேலும், நாள்தோறும் புறநோயாளிகளாக 150 முதல் 200 நபர்கள் சிகிச்சை பெறும் நிலை உள்ளது. அதனால், உள்நோயாளிகள் பிரிவை மேம்படுத்த வேண்டும். மகப்பேறு மருத்துவ சேவையை கூடுதலாக வழங்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை பின்பற்றப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
மேலும், தமிழகத்தில் 37.46 லட்சம் நபர்கள் முதல் தவணை தடுப்பூசியும் மற்றும் 1
கோடியே 8 லட்சத்து 21 ஆயிரத்து 530 நபர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி
செலுத்தாமல் உள்ளனர். இதனால், முதல் தவணை தடுப்பூசி செலுத்திகொண்டவர்கள் 94.60 சதவீதமாகவும் மற்றும் இரண்டாவது தவணை செலுத்திகொண்டவர்கள் 85.37 சதவீதமாகவும் உள்ளது. மேலும், வரும்10ம் தேதி 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. இதில், அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் வீடு, வீடாகச் சென்று சுகாதாரத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், அதிமுகவின் பொதுகுழுக் கூட்டத்துக்கு வரும்
அதிமுகவினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அதிமுகவின் தலைமைக்கு உள்ளது. அதனால், அழைத்துள்ள நபர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கி, தனிமனித இடைவெளிவிட்டு உட்காரவைப்பது, அனைவரையும் காப்பாற்றி யாருக்கும் தொற்று ஏற்படாத வண்ணம் தடுப்பது, அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்புவது அதிமுக தலைமையின் கடமை. அதை அவர்கள் செய்வார்கள் என கருதுகிறோம் என்றார்.
-ம.பவித்ரா








