பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ தொடக்கம்: ஒன்றாக பயணித்த பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய்!

சென்னை பூந்தமல்லி-வடபழனி பெட்ரோ சேவையை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ உள்ளிட்ட கட்டி முடிக்கப்பட்ட ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தடைந்தார். தவெக ஆட்சி அமைந்த பிறகு பிரதமர் மோடி முதல் முறையாகத் தமிழகத்திற்கு வந்துள்ளார். இதற்காக, பிரதமர் செல்லும் வழிகளில் 5 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து தனி விமானத்தில் காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் விஜய் விமான நிலையத்திற்கே சென்று மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து, போரூர் புறப்பட்ட பிரதமர் மோடிக்கு வழியெங்கும் தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்தபடி சென்றார்.

இதனையடுத்து, பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகிய இருவரும் விமான நிலையத்தில் இருந்து பூந்தமல்லி – வடபழனி மெட்ரோவைத் திறந்து வைப்பதற்காகப் போரூர் வந்தடைந்தனர். தொடர்ந்து, பிரதமர் மோடி பூந்தமல்லி – வடபழனி மஞ்சள் நிற வழித்தடம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர், ரூ.750 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட, 14.6 கி.மீ. நீளம் கொண்ட பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ மஞ்சள் நிற வழித்தடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் இணைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, இருவரும் போரூர் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோவில் பயணித்தனர். பிரதமர் மோடி டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் எடுத்துப் பயணம் செய்தார். இந்தப் பயணத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் அருகருகே அமர்ந்து, மெட்ரோ குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.