நடந்து முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் சிபிஐ(எம்) மற்றும் சிபிஐ ஆகிய இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிட்டன. இந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் இடது சாரி கட்சிகள் குறைந்த வாக்குகள் பெற்று 5-ஆம் இடத்தில் இருந்தன. இதனைத்தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் குறைந்த வாக்குகள் பெற்றது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியது. கம்யூனிஸ்டுகளை இழிவுபடுத்தும் வகையிலும் சிலர் பதிவிட்டுவந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கம்யூனிஸ்டுகள் ஒழிய வேண்டும் என்று விரும்புகிற எங்களது எதிரிகளை அதற்குரிய முறையில் எதிர்கொள்வோம் என்று சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “இடைத்தேர்தல் முடிவுகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்ற வாக்குகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான வெறுப்பு, எதிர்ப்பு, ஒவ்வாமை, நட்பு, நலன் என பல விதங்களிலும் கருத்துக்களும், அறிவுரைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.
ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு பரிசீலிப்போம்.
கம்யூனிஸ்டுகள் ஒழிய வேண்டும் என்று விரும்புகிற எங்களது எதிரிகளை அதற்குரிய முறையில் எதிர்கொள்வோம். கம்யூனிசத்திற்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்றும் அழிவில்லை. அழிக்கவும் முடியாது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.




