மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர் நிர்மல்குமார், எம்எல்ஏ விஜய், தங்கப்பாண்டி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். உசிலம்பட்டி தொகுதியில் 300-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியும், 70-க்கும் மேற்பட்டோருக்குப் பட்டா வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றதாக அமைச்சர் தெரிவித்தார்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான வசதிகளைச் செய்து தருவதற்கு அரசு துணையாக இருக்கும் என்பதை எடுத்துரைக்கும் நிகழ்வாக இது அமைந்ததாகக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சி பெண்களுக்குத் தைரியத்தை அளிக்கும் என நம்புவதாகவும், பெண்களுக்குத் தமிழக முதல்வரும் அரசும் துணையாக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்தியதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, தாய்மாமன் தங்க மோதிரத் திட்டமும் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பயனளிக்கும் என்றும் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி ‘அரசு நிகழ்ச்சி’ எனக் குறிப்பிட்ட அமைச்சர் நிர்மல்குமார், “தமிழக நலனுக்காக மட்டுமேதான் இறங்கிப் போவோமே தவிர, வேறு எதற்காகவும் இல்லை. தமிழக மக்களுக்காகவும், தமிழக நலனுக்காகவும் திட்டங்களைத் தொடங்கி வைக்கப் பிரதமர் வருகிறார்” என்று தெரிவித்தார். மேலும், நேற்று நடைபெற்றது தங்களது கூட்டணிக் கட்சியின் நிகழ்ச்சி என்றும், அந்த நிகழ்வில் முதல்வரும் ராகுல் காந்தியும் நண்பர்கள் என்ற முறையில் சந்தித்துக்கொண்டதாகவும் கூறினார். பிரதமரின் நிகழ்ச்சியும் ராகுல் காந்தி சந்திப்பும் வெவ்வேறு நிகழ்வுகள் என்றும், இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
SIR எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை தொடர்பாகப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், தமிழ்நாட்டிற்கு எதிராகத் தவறு நடந்துள்ளது என்பதை முதலில் தெரிவித்தது தமிழக வெற்றிக் கழகம்தான் என்று கூறினார். திமுக வாக்காளர் பட்டியலில் என்னென்ன குளறுபடிகளைச் செய்தது என்பது அனைவருக்குமே தெரியும் என்றும் குற்றம்சாட்டினார். மேலும், SIR நடவடிக்கை நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்றிருக்கும் என்றும், SIR நடைபெறாமல் இருந்திருந்தால் திமுக 20 தொகுதிகளில்கூட வெற்றி பெற்றிருக்காது என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.




