சென்னையில் நேற்று (அக்.10) நடைபெற்ற மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்வில், இந்திய மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்து அவர் பல்வேறு முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ராகுல் காந்தியின் பொய்ப் பிரச்சாரங்களையும் அவதூறுகளையும் தமிழக மாணவர்களும், இளைஞர்களும் ஒருபோதும் நம்பமாட்டார்கள்!சென்னையில் நடைபெற்ற மாணவர் சந்திப்பு என்ற பெயரிலான அரசியல் மேடையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உண்மைக்குப் புறம்பான அவதூறுகளையும் கற்பனையான குற்றச்சாட்டுகளையும் அள்ளி வீசியுள்ளார்.
தமிழக மாணவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் தேட முயலும் ராகுல் காந்தியின் ஒவ்வொரு பொய்ப் பிரச்சாரத்திற்கும் வரலாற்று உண்மைகளும் புள்ளிவிவரங்களுமே தகுந்த பதிலடியாக அமையும். முதலாவதாக, நீட் விவகாரத்தில் ராகுல் காந்தி பேசுவது அப்பட்டமான அரசியல் போலித்தனம். திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் (UPA) ஆட்சியில்தான் 2010-ல் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவரின் மனைவிதான் உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடினார். அன்று நீட்டை அறிமுகப்படுத்திவிட்டு, இன்று அதற்கு எதிராகப் பேசி கையெழுத்திடுவது ராகுல் காந்தியின் அப்பட்டமான இரட்டை வேடம்! அதேநேரம், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டுவந்த 7.5% உள்ஒதுக்கீட்டால், இன்று ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஏழை அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர்களாகி வருகின்றனர்.
1960-களில் தமிழகத்தில் இந்தியைத் திணித்ததோடு, அதை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காங்கிரஸ், இன்று மொழிப்பற்று நாடகமாடுவது அப்பட்டமான ஏமாற்று வேலை! மாறாக, தமிழின் பெருமையை ஐ.நா. வரை முழங்கி, புதிய நாடாளுமன்றத்தில் ‘செங்கோலை’ நிறுவி, ‘காசி தமிழ் சங்கமம்’ நடத்தியவர் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி. மேலும், தேசிய கல்விக் கொள்கை (NEP) மூலம் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழி வழிக் கல்விக்கே முழு முன்னுரிமை அளித்திருப்பது பிரதமர் நரேந்திர மோடி. அரசுதான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
இறுதியாக, ஜனநாயகத்தைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் ராகுல் காந்தி பேசுவது நகைப்புக்குரியது. நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்து ஜனநாயகத்தை நசுக்கிய வரலாற்றைக் கொண்ட காங்கிரஸுக்கு, ஜனநாயகம் பற்றிப் பேச எந்தத் தார்மீக உரிமையும் இல்லை. மேலும், தனது இறுதிப் பேருரையில் “காங்கிரசை ஒழிப்பதே எனது முதல் வேலை” என முழங்கியிருக்கும் பெரியாரை, தேர்தல் வாக்குகளுக்காக இன்று காங்கிரஸ் துணைக்கு அழைப்பதுதான் அப்பட்டமான சந்தர்ப்பவாதம்! ராகுல் காந்தியின் இந்த வெற்று நாடகங்களை விழிப்புணர்வு கொண்ட தமிழக இளைஞர்களும், மாணவர்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




