தமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ நடிகர் ஜெயம் ரவியின் திரைப்பயணம்

யார் இந்த ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் இவர் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னென்ன? சாக்லெட் பாயாக ரொமாண்டிக் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், ரக்கட் பாயாக, பொன்னியின் செல்வனாக மாறியது எப்படி ? உள்ளிட்ட…

யார் இந்த ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் இவர் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னென்ன? சாக்லெட் பாயாக ரொமாண்டிக் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், ரக்கட் பாயாக, பொன்னியின் செல்வனாக மாறியது எப்படி ? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடைதேடும் சிறிய முயற்சியில் இறங்குகிறது இக்கட்டுரை…

“இந்த படத்த எடுக்க பல பேர் முயற்சி பண்ணியிருக்காங்க, நானே மூனு முற முயற்சி பண்ணியிருக்கேன். ஆனா இப்போதான் என்னாலயே எடுக்க முடிஞ்சது, இவங்களோட சப்போர்ட் இல்லனா என்னால இந்த படத்த எடுத்திருக்க முடியாது..” பொன்னியின் செல்வன்  டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மணிரத்னம் பேசிய வார்த்தைகளே இவை..

பொன்னியின் செல்வன் படத்தை மாபெரும் நட்சத்திர வட்டாரத்தை வைத்து எடுத்துள்ளார் மணிரத்னம். 1000 ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டத்தை மையப்படுத்திய, ராஜராஜ சோழனின் வரலாற்றை எடுத்துரைக்கும் பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்கும் போது நடிகர் ஜெயம் ரவியை பொன்னியின் செல்வனாக, அருள்மொழி வர்மன் கதாப்பாத்திரத்திற்காக தேர்வு செய்கிறார் மணிரத்னம். படத்தில் பல முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்கும் கார்த்தி மற்றும் விக்ரமுக்கு கொடுக்காத பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரத்தை ஏன் ஜெயம் ரவிக்கு கொடுக்கப்பட்டது என்ற கேள்விதான் தற்போதைய தமிழ் சினிமாவில் சூடுபிடித்துள்ளது.

ஆம், யார் இந்த ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் இவர் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னென்ன? சாக்லெட் பாயாக ரொமாண்டிக் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், ரக்கட் பாயாக, பொன்னியின் செல்வனாக மாறியது எப்படி ?

தமிழ் சினிமாவில் பிரபல எடிட்டராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வரும் மோகனுக்கும், வரலட்சுமிக்கும் 1980ம் ஆண்டு செப்10ம் தேதி பிறந்தவர்தான் தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி. மதுரையில் ஒரு சினிமா குடும்பத்தில் பிறந்த ரவி, தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை சென்னையில் படித்து முடித்தவர். விஸ்காம் படிக்க சென்னை லயோலா கல்லூரிக்கு சென்ற ரவிக்கு, கல்லூரியில் சேர இடம் இல்லை என்று மறுக்கப்பட்டது. சினிமா குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, நடிக்க சென்றுவிடுவார் என்று இடம் தர மறுத்த கல்லூரி நிர்வாகத்திடம், என் மகனுக்கு நடிப்பெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கூறி விஸ்காம் படிப்பில் சேர்த்துவிட்டு வந்துள்ளார் தந்தை மோகன். ஜெயம் ரவி இன்றைய தமிழ் சினிமாவில் நட்சத்திரமாக ஜொலிக்க முதல் காரணம் அவரது அண்ணன் மோகன் ராஜாதான். ஆம், சிறுவயது முதலே தனது தம்பியை வெற்றிபெற வைத்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடனே வளர்ந்துள்ளார் மோகன் ராஜா. ஒரு சினிமா குடும்பம் என்றால் எளிதாக திரையுலகில் வாய்ப்பு பெற்று ஜொலித்து விடலாம் என்று எண்ணும் நினைக்கும் பலருக்கு தெரிவதில்லை, உழைத்தால் மட்டுமே சினிமாவிலும் உயரமுடியும் என்று.

ஆம், பிரபல எடிட்டரின் மகன் என்றாலும், நடிப்பில் ஆர்வம் வந்த பிறகு முறையாக நடிப்பை கற்றுக்கொண்டே சினிமாவில் அடியெடுத்து வைத்தார் ரவி. சிறுவயது முதலே நடனத்தில் ஆர்வம் இருந்ததால் நலினி பாலகிருஷ்ணன் எனும் நடனக்கலைஞரிடன் இருந்து பரதநாட்டியத்தை முழுமையாக கற்றுத்தேர்ந்தார் ரவி. ஆம், தனது 12ம் வயதிலேயே அரங்கேற்றைத்தையும் முடித்துவிட்டு, கல்லூரி காலத்திற்கு பிறகு மும்பையின் கிஷோர் கபூர் எனும் நிறுவனத்தில் நடிப்பையும் கற்றுத்தேர்ந்தார்.

ஒரு பக்கம் சினிமாவில் ஆர்வம் கூடக்கூட, கேமரா, எடிட்டிங், கதை எழுதுவது போன்ற சினிமாவில் அங்கங்களை கற்கத்தொடங்கினார். அதிலும் குறிப்பாக 2001ம் ஆண்டு நடிகர் கமலஹாசனின் ஆளவந்தான் திரைப்படத்தில், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார் ரவி.

பாவா பாவமரிடி மற்றும் பால்நட்டி பவுருஷம் என்ற தெலுங்கு படங்களில் குழந்தை கதாப்பாத்திரமாக நடித்து இளமை கால நடிப்பு பசிக்கு தீனீபோட்டுள்ளார் ரவி.  இரு படங்களும் தந்தையால் தயாரிக்கப்பட்ட படங்கள் என்றாலும், சினிமாவில் ரவி எளிதாக நுழைந்துவிட்டார் என்று விமர்சிக்கும் பலருக்கு பதிலடி கொடுத்து வருகிறார் ரவி.

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று ரவி நினைத்ததை விட, தனது தம்பி சினிமாவில் வென்றிட வேண்டும் என்று கனவு கண்டார் அண்ணனும், இயக்குநருமான மோகன் ராஜா. ஆம், 2003ம் ஆண்டு வெளியான ஜெயம் திரைப்படத்தை இரண்டாவது படமாக மோகன் ராஜா இயக்க, இப்படத்தை அவரது தந்தை மோகனே முன் நின்று தயாரித்தார். படத்தில் நடித்தவர் இருபத்து மூன்றே வயதாக இளைஞன். ஆனாலும், உணர்ச்சி மிக்க கிராமத்து காதல் கதையை தனது நடிப்பால் அசால்டாக நடித்து முடிக்கிறான் அந்த இளைஞன். காதல் காட்சிகளானாலும் சரி, சண்டைக் காட்சிகளானாலும் சரி அனைத்தையும் அனாயசமாக முடித்துக்காட்டி தனக்கான பெயரை தமிழ் சினிமா வரலாற்றில் ஆழ எழுதிக்கொண்டான். ஆம், அவர்தான் ரவி என்னும் ஜெயம் ரவி.

படத்தின் முதல் நாளில் க்ளாப்ஸ் அடித்து உலக நாயகன் கமல்ஹாசன் தொடங்கிவைக்க, பெரிய பட்ஜட்டோடு தயாரானது ஜெயம் திரைப்படம். கிராமத்து வாழ்க்கையில், ஏழை குடும்பத்தில் பிறந்து கல்லூரி செல்லும் ரவிக்கு, கல்லூரியிலும், ரயிலிலும் பூக்கும் காதலை அதன் அழகியலோடு வெளிப்படுத்தினான் இளைஞன் ரவி. அன்றாடம் வேலைகளை செய்து வாழ்க்கையை நடத்தும் ரவிக்கும், வசதியான குடும்பத்தில் பிறந்த சுஜாதாவுக்கும் இடையேயான காதல் இறுதியில் எப்படி ஒன்று சேர்கிறது என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த கதையில், நம்ம ஊர் பையன் என்பதைப் போல நடிப்பில் அசத்தினார் ரவி.சகீலா, செந்தில், மயில்சாமி போன்ற பிரபல கலைஞர்கள் இப்படத்தில் கை கோர்த்தது கூடுதல் பலமாகவே பார்க்கப்பட்டது. கவிதையே தெரியுமா பாடலில் கயிறு கட்டி அசத்துவது, காதல் காதல் எனும் பாடலில் கண்ணீர் விட்டு அழுவது என்று முதல் படத்திலேயே வெறைட்டி காட்டினார் ரவி. சொந்த அண்ணன் இயக்க, படத்தை அப்பாவே தயாரித்திருந்தார். படம் எடிடிங் முடிந்து ப்ரிவ்யூவ் ஷோ பாக்க சென்ற எடிட்டர் மோகனை தொடர்புகொண்டு பேசிய ரஜினி, நானும் பிரிவ்யூவ் ஷோ பாக்கலாமா என்று அடம்பிடித்து கேட்டு, பின்பு வந்து பார்த்துள்ளார். பாதி படம் முடிந்த வேளையில், ஏன் இந்த படத்தை இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளீர்கள் என்று மோகனிடம் கேட்டார் ரஜினி. அதற்கு பதிலளித்த மோகன், இது வெறும் படம் அல்ல, என் பிள்ளைகளின் வாழ்க்கை.. அதற்காகத்தான் இவ்வளவு பொருட்செலவில் படம் என்று நெகிழ்ந்து பேசி முடிக்க நல்ல ஏற்பாடுகளுடன் படம் வெளியானது.

ரவிக்கு அறிமுக படம் என்றாலும், இடம்பெற்ற காட்சிகளும், வசனங்களும் குறிப்பாக கவிதையே தெரியுமா பாடலும், ‘போயா போ’ என்ற வசனமும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. ஏ அந்த படத்த பாத்தீங்களாப்பா, என்னா அருமையா எடுத்திருக்காங்க என்று ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது ஜெயம். படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று ஒரு பக்கம் பாராட்டுகள் குவிய, மற்றொரு பக்கம் ரீமேக் படம் தானே என்ற விமர்சனமும் இருக்கவே செய்தது.

ஆம், 2002ம் ஆண்டு தெலுங்கில் அதே பெயரில் வெளியான ஜெயம் படத்தை தான் தமிழில் ரீமேக் செய்தார் இயக்குநர் மோகன் ராஜா. அத்தனை விமர்சனங்களையும் தாண்டி, 25 கோடி வசூலை ஈட்டி அனைவரையும் தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்ததது ஜெயம் திரைப்படம். அங்குதான் தமிழ் சினிமாவில் பிறந்தான் ஜெயம் ரவி எனும் நாயகன்.

தந்தை மோகன் தயாரிப்பில், அண்ணன் ராஜா இயக்க, தம்பி ரவி நடித்த குடும்ப படம் ஜெயம் வெற்றி பெற்றதை அடுத்து, இதே கூட்டணி, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என அடுத்த படத்துக்கு களமிறங்கியது. முதல் படத்தை போலவே இப்படமும் தெலுங்கு ரீமேக் தான். ஆம், அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி படத்தில், சில மாற்றங்கள் செய்து, இப்படத்தை இயக்கியிருந்தார், ராஜா.

அம்மா, மகன் பாசத்தை மையமாக வைத்து, இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. படத்தின் முதல் பாதியானது அம்மா, மகன் இடையேயான பாசத்தை எடுத்துக்காட்டும் காட்சிகள் நகர்ந்திருக்க, இடையிடையே வந்து எண்ட்ரீ கொடுத்தார் அசின். சின்னக்கலைவாணர் விவேக்கும் படத்தில் இணைய செண்டிமெண்டைத் தொடர்ந்து காமெடியும் படத்தில் பேசப்பட்டது. ‘பாக்ஸிங்கை வெச்சுப் படம் எடுத்தா ஓடாது; மலேஷியாவில் எடுத்த படம் ஓடாது’ என, சினிமா சென்டிமென்ட் அனைத்தையும்,  மூக்கில் குத்தி உடைத்தெறிந்தது எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி. படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது.ஒரு பக்கம் அம்மாவுடனான பாசமும், அப்பாவுடனான கோபமும் அந்நியன் விக்ரமைப் போல ஜெயம் ரவியை எடுத்துக்காட்டியது. முன்பே தெலுங்கில்  நடித்த அசின், இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ‘மலபார்’ என்ற செல்ல பெயரும் பெற்றார். படத்தின் பாக்ஸிங் காட்சிகளிலும் கல்லூரி சம்மந்தப்பட்ட காட்சிகளிலும் ஒரு ஓரமாக வந்துசென்ற நடிகர் விஜய் சேதுபதியை மக்கள் கவனிக்க தவறியிருந்தாலும், ஜெயம் ரவிக்கென தனியாக ரசிகர் பட்டாளமே உருவாகத்தொடங்கியது.

தொடர்ந்து இப்படத்திற்காக, சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருது பெற்றார், ஸ்ரீகாந்த் தேவா. ‘ஐயோ ஐயோ உன் கண்கள், சென்னைச் செந்தமிழ் மறந்தேன், நீயே நீயே நானே…’ என பாடல்கள் ஹிட் அடித்தது. 2004ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமானது. அதுவரை தமிழ் சினிமா வைத்திருக்காத ஒரு படத்தலைப்பை எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்று வைத்து திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார் தயாரிப்பாளரான மோகன். ஆம், எப்போதும் பிள்ளைகளை அப்பாவின் பெயரோடு கூறும் நடைமுறையில் இருந்து அம்மாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது வரவேற்பை பெற்றது. படம் பார்த்தவர்களெல்லாம், அம்மா, மகன் காதலை கண்டு ரசிக்க, படமும் 54 கோடியை ஈட்டி மாபெரும் வெற்றிப்படமானது. ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் இரண்டாவது படமே என்றாலும் பெரும் திருப்புமுனையாக மாறியது இப்படம்.

தொடர்ந்து 2005ம் ஆண்டே தாஸ், மழை ஆகிய திரைப்படங்களில் நடித்தார் ஜெயம் ரவி. பின்னர் 2006ம் ஆண்டில் வெளியான இதய திருடன் திரைப்படத்தின் மூலம் தனது இருப்பை தக்கவைத்துக்கொண்டார் ஜெயம் ரவி.

குடும்பம் இல்லாத இளைஞன் டி. மகேஷ் கதாப்பாத்திரத்தில் களமிறங்கினார் ரவி. நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவே, இடம்பெற்ற காதல் காட்சிகளும் இளைஞர்களிடம் வொர்க் அவுட் ஆனது. இதய திருடன் திரைப்படத்தின் மூலம் பெண் ரசிகைகளின் இதயத்தையும் திருடியே சென்றார் ஜெயம் ரவி. பிரகாஷ் ராஜ் உடனான மோதல், கம்னா ஜெத்மலானியுடனாக காதலும் இதய திருடன் படத்திற்கு பலம் சேர்த்தது.முழுக்க முழுக்க காதலை மட்டுமே மையமாகக் கொண்ட ரொமான்டிக் படமாக, இயக்குநர் மோகன் ராஜா, ஜெயம் ரவி கூட்டணியில் மூன்றாவது திரைப்படமாக உருவானது something something உனக்கும் எனக்கும் திரைப்படம். த்ரிஷாவுடன் ஜெயம்ரவி கைகோர்த்த இப்படத்தில் இயக்குநர் பாக்யராஜ், மணிவன்னன் மற்றும் முக்கிய வேடத்தில் பிரபு உள்ளிட்டோர் நடித்து கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டினர். ஆம், கிராமத்து பெண் த்ரிஷாவுக்கும், லண்டனில் இருந்து விடுப்பில் வீடுவந்த ஜெயம் ரவிக்கும் எதிர்பாராத விதமாக உருவாகும் காதல் எவ்வாறு மலர்கிறது என்பதே கதையாக இருந்தது.காதலியின் அண்ணன் பிரபுவின் நிபந்தனைக்கேற்ப கிராமத்துக்கு வந்து உழுது, பயிரிடும் ஜெயம் ரவியின் கதாப்பாத்திரம் பக்கத்து வீட்டு பையனைப்போலதான் சித்தரிக்கப்பட்டது. ஆம், மாட்டுக்கு தண்ணி வைப்பது, சாணம் அள்ளுவது என்று நாள் முழுவதும் காதலிக்காக கஷ்டப்படுவதையெல்லாம் பார்த்துவிட்டு சிலாகித்தனர் தமிழ் சினிமா ரசிகர்கள். 3வது முறையாக ஒன்றுசேர்ந்து வென்றுகாட்டியது அண்ணன் தம்பி கூட்டணி. நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாக, இதுவும் ரீமேக் தானே என்று விமர்சித்த கூட்டத்திற்கு, தனது இயக்கத்தில் புதுமையை காட்டியிருந்தார் ராஜா.

படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடிக்க சந்தோஷ் எனும் குறும்பு கேரக்டரில் ஜெயம் ரவியும், கவிதா என்று கிராமத்து வெகுளிப் பெண் கதாப்பாத்திரமாக த்ரிஷாவும் நடித்திருக்க, முத்துப்பாண்டியாகவே வாழ்ந்துகாட்டினார் நடிகர் பிரபு. பிரபு – ஜெயம் ரவியுடனான காட்சிகள் படத்தில் இடம்பெற்ற ஆறில் மூன்று பாடல்கள் ஹிட்டடித்தது.

தொடர்ந்து 2007ல் இயக்குநர் எழில் எழுதி இயக்கிய தீபாவளித் திரைப்படத்தில் பில்லுவாக எண்ட்ரீ கொடுத்தார் ஜெயம் ரவி. நாயகி பாவனா, அப்பா விஜயகுமார், வில்லன் லால் என்று புதிய களத்தில், யுவன் சங்கர் ராஜாவுடன் கூட்டணி சேர்ந்த இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடல்களும் அன்று முதல் இன்றுவரை பலருக்கும் ஃபேவரைட் தான். காதலைச் சொல்லும்போது காதல்வைத்து காதல்வைத்து பாடலையும், பிரிவின் போது போகாதே போகாதே பாடலையும் பாடி ஆதங்கத்தை தீர்த்துக்கொள்கின்றனர் ரசிகர்கள்.

பின்னணி இசை, பாடல்கள், குரல் என்று அனைவரது ரத்தத்திலும் தனது இசையை பாய்ச்சினார் யுவன்.  நா முத்துக்குமார், யுகபாரதி இருவரும் பாடல்களை எழுத, அதற்கு உயிரூட்டியிருந்தார் யுவன். 2007 பிப்வரியில் வெளியாகி திரையரங்குகளில் பட்டாசாய் வெடித்தது தீபாவளி திரைப்படம்.பிரகாஷ் ராஜ் கூட்டணியில் மீண்டும் சந்தோஷ் ’சுப்ரமணியம் திரைப்படத்தில்’ இணைந்தார் ஜெயம் ரவி. சந்தானத்தின் காமெடியுடன், ப்ரேம்ஜியும், ஜெனிலியாவும் கலக்கியிருந்தனர்.

அப்பா மகனுக்கு இடையே உள்ள உறவை மையமாக கொண்டு வெளிவந்தது ’சந்தோஷ் சுப்ரமணியம்’.  இப்படத்தில் அன்பான கண்டிப்பான தந்தை தன் மகனுக்கு என்னவெல்லாம் வேண்டும் என்று செய்துகொடுத்து, தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பதும், அதனால் ஏமாற்றமடையும் ஜெயம் ரவியின் வாழ்க்கையே படமாக்கப்பட்டது.

படத்தில் இடம்பெற்ற  ’எல்லா தப்பையும் நீங்க தான் ப்பா பண்ணீங்க’ எனும் Emotionalஆன டயலாக்கை அழுத்தமான ஆக்ரோஷமான குரலுடன் பேசியிருப்பார் ஜெயம் ரவி. சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படம் 2008ம் ஆண்டு வெளியாக,  குடும்பம் குடும்பமாக திரைப்படம் பார்க்க சென்றனர் ரசிகர்கள். அதே ஆண்டில் காதல் – காமெடி – ஆக்‌ஷன் என்று மிக்சிங்காக தயாரானது தாம் தூம் திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்குநர் ஜீவா எழுதி இயக்க, கங்கனா ரணாவத் நாயகியாக நடித்திருந்தார். அன்பே என் அன்பே, சகியே என் இளம் சகியே என்று பாடல்கள் ஹிட் அடிக்க, ஒரே ஆண்டில் இரண்டு ஹிட் படங்களை கொடுத்து காதலர்களுக்கு இரட்டை விருந்தளித்தார் ஜெயம் ரவி.தமிழ் சினிமாவின் இரண்டு பெரும் நடிகர்கள் அஜித், விஜய் அடுத்தடுத்த படங்களை கொடுத்துகொண்டிருந்த நேரத்தில்,  பேராண்மை என்று ஆக்சன் படத்தை கொடுத்து அதிரடி காட்டினார் ஜெயம் ரவி. ஆம், அதுவரை இல்லாத அளவுக்கு கதாப்பாத்திரத்தை தேர்வு செய்திருந்தார் ரவி. மலை கிராமத்துப் பகுதியிலிருந்து படித்து ஆசிரியராக மாறி பாடம் எடுத்து பார்ப்போரின் பார்வைக்கு பாடமெடுத்தார் ஜெயம் ரவி. இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்காக ராக்கெட் ஏவுவதை அன்னிய சக்திகள் சீர்குலைக்க காட்டுக்குள் ஊடுருவும்போது அவர்களை 5 மாணவிகள் உதவியுடன் முறியடிக்கிறார்  ஜெயம் ரவி. சண்டைக்காட்சிகள், வசனங்கள் அனைத்திலும் வித்தியாசம் காட்டி அசத்தி, சாக்லெட் பாயிலிருந்து ரக்கட் பாயாக மாறினார் ஜெயம் ரவி. தொடர்ந்து 2010ல் கிக் – ஐ அடித்தலமாக வைத்து புதிய படத்தை அண்ணனும் இயக்குநருமான ராஜா இயக்க நல்ல காமெடி படமாக அமைந்தது தில்லாலங்கடி..

நடனப்புயல் பிரபுதேவாவின் இயக்கத்தில் முதல்முறையாக கூட்டணி அமைத்து காதலை மையமாக கொண்டு உருவான படத்தில் நடித்தார் ஜெயம் ரவி. ஆம் அதுதான் ‘எங்கேயும் காதல்’. சிறந்த பாடல்களைக் கொண்ட காதல் படமாக, இன்றுவரை கொண்டாடும் படமாக ‘எங்கேயும் காதல்’ உருவானது. படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே பெரிய ஹிட் அடிக்க படத்தையும், பாடல்களையும், நாயகன் ஜெயம் ரவியையும் கொண்டாடி தீர்த்தது இளைஞர் பட்டாளம்.

சாக்லெட் பாயாக அறியப்பட்ட ஜெயம் ரவி, ரொமாண்டிக் ஹீரோவாக கலக்கியிருந்தார் ’எங்கேயும் காதலில்’. 2011ம் ஆண்டு வெளியான இப்படம், காதலை ஊரெங்கும் பேசவைத்து புது வடிவம் கொடுத்திருந்தது. தாம் தூம் படத்தில் உருவான கூட்டணி என்றாலும், எங்கேயும் காதல் படத்தில்தான் மிளிர்ந்தது ஹாரிஸ் ஜெயராஜ், ஜெயம் ரவி கூட்டணி. தீ இல்லை, லோலிட்டா, திமு திமு, எங்கேயும் காதல் என பாடல்கள் சரவெடி வெடித்தன. ஏன் இன்றுவரை அந்த வெடியின் சத்தம் குறையவில்லை என்கிறார்கள் சினிமாவை அறிந்தவர்கள்.

“பெஸ்ட் ரொமாண்டிக் ஹீரோ.. உங்களுக்கே தெரியும் இல்ல, தமிழ் சினிமாவுலயே யார் ரொம்ப அழகான ஹீரோன்னு.. வாங்கண்ணா ஜெயம் ரவிண்ணா” 2012ம் ஆண்டு ஜெயம் ரவிக்கு பெஸ்ட் ரொமாண்டிக் ஹீரோ விருது வழங்கிய நடிகர் விஜய் பேசிய வசனங்களே இவை. நடிப்பை மெருகேற்றிக்கொண்டு அடுத்தடுத்த படங்களில் ஜெயம் ரவி கவனம் செலுத்துவதே வெற்றிக்கு காரணம் என்று விமர்சனங்களை எழுதித்தள்ளின பத்திரிகைகள்.

தில்லாலங்கடி, எங்கேயும் காதல் என அழகான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த ஜெயம் ரவியின் மற்றுமொரு முக்கியமான திரைப்படம் அமீரின் ஆதிபகவன். மாஃபியா டானாக ஒரு பக்கம், பெண்தன்மை கொண்ட கேங்ஸ்டராக இன்னொரு பக்கம் என ஜெயம் ரவியின் நடிப்புக்கு செம தீனீயாக அமைந்தது ஆதிபகவன். தொடர்ந்து சமுத்திரக்கனியுடன் நிமிர்ந்து நில், பக்கா காதல் ரைடாக ரோமியோ ஜூலியட், ஃபுல் டைம் காமெடியில் சகலகலா வல்லவன் ஆகிய படங்களில் நடித்து அனைவரும் விரும்பும் நடிகரானார் ஜெயம் ரவி.

ரோமியோ ஜூலியட் திரைப்படத்தில் ஹன்சிகாவுடன் இரண்டாவது முறையாக கை கோர்த்து வித்தியாசமான காதல் கதை ஒன்றை படைத்திருந்தார் ஜெயம் ரவி. தொடர்ந்து 2015ம் ஆண்டு தனது அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் புதிய முயற்சி ஒன்றை அனாயசமாக செய்துமுடித்தார் ஜெயம் ரவி. ஆம், அதுவரை தனது அண்ணன் இயக்கத்தில் 5 படங்களில் நடித்திருந்தாலும், 2015ம் ஆண்டு வெளியான ’தனி ஒருவன்’ திரைப்படம்தான் இயக்குநர் ராஜாவே எழுதி இயக்கிய முதல் திரைப்படம். இதில் மித்ரன் கதாப்பாத்திரத்தில் ஜெயம் ரவியும், மகிமா கதாப்பாத்திரத்தில் நயன்தாராவும் முதல்முறை இணைந்து நடிக்க, கோவத்திலும் காதலிலும் திரையில் மிளிர்ந்தது ஜெயம் – நயன் கூட்டணி.

வில்லனாக நடித்திருந்த அரவிந்த்சாமி, வில்லனையே ரசிக்கும் வண்ணத்திலும், கிட்டத்தட்ட வில்லனாக ஹீரோ மித்ரன் இருந்ததுமே, ராஜாவின் கதை சிறந்த கதை சொல்லும் முறை என்று சிலாகித்தனர் சினிமாவைத் தெரிந்தவர்கள். படத்தில் தன்னை அரவிந்த்சாமி கண்காணிப்பது தெரிந்தபிறகு காதலியை திட்டுவதுபோல சூழலை பேசாமல் புரியவைத்த விதம், அரவிந்த் சாமியை காப்பாற்ற நினைத்தபோது அது முடியாமல் போனதும், காட்டிய ஏமாற்றம் என்று அனைத்திலும் ஜொலித்தார் ஜெயம் ரவி.

தனி ஒருவன் பட இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது, என் வாழ்வில் இது மிக முக்கியமான தருணம் என்று பேசத்தொடங்கி, சிறுவயது முதல் என் அண்ணன் என் சந்தோசத்திற்காக வாழ்ந்துவருகிறார். அவர் கண்ணில் இன்றுதான் நான் சந்தோசத்தை பார்க்கிறேன். இதுவரை அவரை ரீமேக் ராஜா என்று விமர்சித்தவர்களுக்கு தனி ஒருவன் திரைப்படத்தை எடுத்து, தான் யார் என்பதை நிரூபித்துள்ளார். அவர் ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்பது எங்களுக்கு முன்பே தெரியும். ஆனால் அதை இன்றுதான் நிரூபித்துள்ளோம் என்று நெகிழ்ந்து பேசினார் ஜெயம் ரவி.

தனி ஒருவனில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடல்களுடம் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடிக்கவே, படம் பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து அதே ஆண்டில் பூலோகம் என்று பாக்ஸிங்கில் கலக்கிவிட்டு, தொடர்ச்சியாக 2016ம் ஆண்டு மிருதனில் அசத்தினார் ஜெயம் ரவி. தமிழ் சினிமாவிலும் ஜாம்பி படங்களை எடுக்க முடியும் என்று இதுவரை இல்லாததை செய்து சாதித்து காட்டினார் ஜெயம் ரவி. நாயகியாக லக்‌ஷமி மேனன் நடிக்க, படத்தின் க்ளைமேக்ஸில் இடம்பெற்ற பாடலை தத்ரூபமாக ஜாம்பியாக மாறிய நிலையிலும் காதலியை காப்பாற்றியது என்ற வித்தியாச முயற்சியிக்கு உயிரூட்டினார் ஜெயம் ரவி. அடுத்தடுத்த படங்களில் அசத்துவதாக திரை விமர்சகர்கள் உச்சிநுகர்ந்து பாராட்டினர்.

போகன், வனமகன், டிக்டிக்டிக் போன்ற படங்களை தேர்வு செய்து  தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக ஹிட் அடித்து வரும் ஜெயம் ரவிக்கு அடங்க மறு திரைப்படம் உற்றுநோக்கப்பட்டது. ஒரு போலீஸ் அதிகாரி நேர்மையாக செயல்பட்டதற்காக பழிவாங்கப்படுவதும்,  தனது இழப்புக்கு காரணமான வில்லன்களை அந்த போலீகாரன் எப்படி திருப்பி அடிக்கிறான், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற அரசியல் மற்றும் அதிகாரிகளின் பிள்ளைகளை எப்படி பழிவாங்குகிறான் என்பதே அடங்க மறு திரைப்படத்தின் கதை..

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களை திரும்பிப்பார்க்க வைத்த முக்கிய படமாக வந்து சேர்ந்தது கோமாளி திரைப்படம்.  ‘கோமாளி’ படத்தில் 15 ஆண்டுகள் கோமாவில் இருந்துவிட்டு மீண்ட இளைஞராகவும் பல்வேறு வகைமைகளைச் சேர்ந்த படங்களில் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்தார் ஜெயம் ரவி. 2019ம் ஆண்டு ஜெயம் ரவி, யோகி பாபு, காஜல் கூட்டணியில் வெளியான கோமாளி திரைப்படம் 80 கோடியை வசூல் செய்து ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இரண்டு வாரங்களுக்கு முழுவதும் தினமும் தக்காளி, கேரட் மற்றும் ப்ளேக் காபியை மட்டுமே சாப்பிட்டு 18 கிலோ எடையை கோமாளி படத்துக்காக குறைத்தார் ஜெயம் ரவி. நேர்காணல் ஒன்றில் பேசியபோது நான் செய்தது ஆரோக்கியமானதல்ல, தயவுசெய்து இது போன்ற எடைக்குறைப்பை யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இதுவரை விவசாயிகளுக்காக படம் ஏதும் எடுக்கவில்லையே என்று யாரும் குறை சொல்வதற்கு முன்பாக விவசாய பிரச்னையை மையமாக கொண்ட பூமி திரைப்படத்தில் விவசாயிகளுக்கும், பாரம்பரிய விதைகளுக்கும் குரல் கொடுத்தார் ஜெயம் ரவி.

அமெரிக்காவின் நாசாவில் பணியாற்றிவிட்டு தமிழ்நாடு திரும்பிய ஜெயம் ரவி, விவசாயிகளின் பிரச்னைகளை கண்டு அவர்களுக்காக குரல் கொடுத்து, கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக விவசாயத்தை ஊக்குவிப்பது என்று நகர்ந்தது பூமி திரைப்படத்தின் கதை. இதுவரை 25 படங்களில் நடித்துவிட்ட ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் பெரும்பாலானவை வெற்றிப் படங்களாகவும் அமைந்துள்ளன.

சமீபத்தில் செந்தில் என்ற தனது ரசிகர் உயிரிழந்தபோது நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, குடும்பத்துக்கு தேவையான இருப்புத் தொகையை வங்கிக்கணக்கில் செலுத்திவிட்டு வந்த ஜெயம் ரவி, தனது ரசிகர் மன்றத்தில் இருப்பவர்களுக்கு விபத்துக்காப்பீட்டை உறுதிசெய்துள்ளார். இப்படி தனது செயல்களால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திவருகிறார் ஜெயம் ரவி.

வெற்றி, தோல்வி என பரஸ்பரம் இருவேறுபட்ட கதைக்களங்களில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. என்றைக்கும் ஜெயம் ரவியின் படத்தில் ஆபாசம். அதீத வன்முறை போன்ற விஷயங்கள் இருந்ததில்லை. அவருடைய திரைப்படங்கள் எதுவும் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் கருத்துகளை முன்னிறுத்தியதில்லை. அப்படிப்பட்ட தீங்கில்லாத கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதாலேயே அனைத்து தரப்பினரின் நன்மதிப்பைப் பெற்ற நாயக நடிகராக விளங்குகிறார் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள். தொடர்ந்து ஒவ்வொரு படத்தின் கதையிலும் சரி, தன்னுடைய கதாபாத்திரத்திலும் சரி ஏதேனும் ஒரு புதுமை இருப்பதை உறுதி செய்வது ஜெயம் ரவி அமைதியாகச் செய்துகொண்டிருக்கும் ஒரு சாதனை என்கிறது சினிமா வட்டாரம்.

“போ writerta போய் உக்காரு, கேமரா மேன் கிட்ட போய் கத்துக்கோ, போ.. நீ ஏன் என் கம்பெனி ல வேல செய்ற, போய் வேற கம்பெனி ல வேல செய்.. போடா என் பிள்ளைன்னு சொல்லாத வெளில.. யாருக்கும் தெரியக்கூடாதுன்னு சொல்லிதான் எங்கப்பா எங்கள வளத்தாரு..” என்று தனது தந்தை குறித்து விழா மேடையில் நா தழுதழுக்க பேசினார் ஜெயம் ரவி. இதுவரை பல வெற்றிப்படங்களை கொடுத்துவிட்டு தமிழ் சினிமாவின் தனி ஒருவனாக வலம்வரும் ஜெயம் ரவி, அடுத்ததாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.

இந்தியா முழுவதிலும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழு வர்மனாக ஜெயம் ரவி நடித்துள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  “படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு போன பிறகும் ராஜராஜ சோழனை மறந்து விடாதே. உன் நடை உடை, பேச்சு எல்லாவற்றிலும் ராஜராஜ சோழன் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் மணிரத்னம்” என்று பேட்டியளித்தார் ஜெயம் ரவி. 19 வருட தனது திரைப்பயணத்தில் பல்வேறு வகையான படங்களில் நடத்து தன்னைத் தானே வெற்றி நாயகனாக ஜெயம்ரவி அறிமுகப்படுத்திக்கொண்டார் என்றே சொல்லவேண்டும்.

எந்த செயலை செய்ய வேண்டுமானாலும் அதனை இன்றே செய்து முடிக்க வேண்டும்.. நல்லது செய்ய வேண்டும் என்றால் உடனே செய்ய வேண்டும் என்ற அவரது வார்த்தைகள்தான் தமிழ் சினிமாவில் தனி ஒருவனாக நிருத்திவைத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

– யுவராம் பரமசிவம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.