பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸுக்கு இன்னும் 100 நாட்களே உள்ளதாக பொன்னியின் செல்வன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தனர்.
பொன்னியின் செல்வன் முதல் பாகம், ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வெற்றிப் படமாகவே பொன்னியின் செல்வன் கருதப்படுகிறது.
முதல் பாகமே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இன்னும் 100 நாட்களே உள்ளதாக தெரிவித்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது..
“சிம்மாசனம், பழிவாங்குதல், காதல், போர் என அனைத்திற்குமான சாட்சி இன்னும் 100 நாட்களில்..! உங்கள் காலெண்டர்களில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்”
பொன்னியின் செல்வன் 2 – வெளியாகும் தேதி ஏப்ரல் 28 “ என அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







