முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

பொல்லார்ட் மிரட்டலில் பணிந்தது தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியில், பொல்லார்ட் அதிரடியால், மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றிய நிலையில், இப்போது 5 போட்டிகள் கொண்ட டி-20 போட்டி நடைபெற்று வருகிறது.

முதல் மூன்று போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் ஒரு வெற்றியும் தென்னாப்பிரிக்க அணி 2 போட்டிகளில் வெற்றியும் பெற்றிருந்தது. 4-வது போட்டி நேற்று நடந்தது. தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.

தொடக்க வீரர் சிம்மன்ஸ் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய பொல்லார்ட் வழக்கம் போல அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். அவர் மிரட்டலாக, 25 பந்து களில் 51 ரன்கள் விளாசினார். இதில் 5 சிக்சர்களும் 2 பவுண்டரிகளும் அடக்கம்.

168-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியில், தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் மட்டுமே, அதிகபட்சமாக 43 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் வருவதும் போவதுமாக இருந்ததால், அந்த அணியால், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் டிவைன் பிராவோ 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி டி-20 போட்டி நாளை நடக்க இருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

50% பயணிகளுடன் நாளை காலை 6 மணி முதல் சென்னையில் பேருந்துகள் இயக்கம்: மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

Halley karthi

சட்டப்பேரவையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்

Saravana Kumar

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசு!

Halley karthi