கடந்த 2020ம் ஆண்டு டெல்லியில் மூண்ட கலவரத்தில் தொடர்பு இருப்பதாகக்கூறி கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவ செயற்பாட்டாளர்களான தேவங்கனா கலிதா, நடாஷா நார்வால் ஆகிய இருவரும் சில தினங்களுக்கு முன்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 13 மாதங்களாக சிறையில் இருந்த அனுபவங்கள் குறித்து, தனியார் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளனர்.
பிஞ்ரா டாட்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிஞ்ரா டாட் (Pinjra Tod) அதாவது கூண்டை உடையுங்கள் (Break the Cage) என்ற அமைப்பானது, டெல்லியில் உள்ள கல்லூரிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் பெண்களுக்கு விதிக்கப்படும் அதிக கட்டுப்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு டெல்லி உள்ள கல்லூரிகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வெறுப்புணர்வு, பாகுபாடுகள் மற்றும் மாணவர்களை போல மாணவிகளுக்கும் கல்லூரி விடுதிகளில் சமமான விதிகள் வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்கள் ஓரளவு வெற்றியையும் கண்டன. இந்த போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்கள்தான் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் தேவங்கனா கலிதா மற்றும் நடாஷா நார்வால். இந்த போராட்டத்தின் மூலமே இவர்கள் மாணவர்கள் மத்தியிலும், ஊடகங்களிலும் ஓரளவு பிரபலமானார்கள். இவர்கள் , பிஞ்ரா டாட் அமைப்பின் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல முன்னெடுப்புகளை செய்துவருகின்றனர்.
மாணவ செயற்பாட்டாளர்களான இவர்கள் இருவரும், கடந்த 2020 ஆண்டு பிப்ரவரி மாத இறுதி வாரத்தில் வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டம் மற்றும் மூண்ட கலவரத்தோடு தொடர்புடையவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டு, UAPA (Unlawful Activities Prevention Act) அதாவது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த கலவரத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய மக்களோடு இணைந்து, பிஞ்ரா டாட் அமைப்பின் சார்பாக தேவங்கனா கலிதாவும், நடாஷாவும் போராட்டத்தில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறை அனுபவம்
கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் தங்களுடைய ஓராண்டு கால சிறை அனுபவத்தை தனியார் ஆங்கில செய்தி நிறுவனத்துடன் பகிர்ந்துகொண்டனர். முதலில் பேசிய தேவங்கனா, பல ஆண்டுகளாக கூண்டை உடைத்து வெளியே வாருங்கள் என, பெண்களுக்காக குரல் கொடுத்த நாங்களே சிறை என்னும் பெரிய கூண்டிற்குள் சிக்கிக்கொண்டதாக தெரிவித்தார். 2020 மே 23ம் தேதி இவர்களை கைது செய்த போலீசார், 5 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். பின்னர் மே மாதம் 28ம் தேதி திகார் சிறைக்கு கொண்டு சென்றுள்ளனர். 5 நாள் விசாரணைக்கு பிறகு, சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே இருவரும் ஓரளவு மன நிம்மதி அடைந்ததாக குறிப்பிடுகிறார்கள். ஆனால், சிறை என்பது நிம்மதியான இடமல்ல, மாறாக வாழ்வதற்காக தினம் தினம் போராடக்கூடிய இடம், குறிப்பாக உடல் அளவிலும், உணர்வு மற்றும் மனதளவிலும் கடுமையாக போராட வேண்டும் என்பதை, நாட்கள் செல்ல செல்ல, இருவரும் உணர்ந்து கொண்டதாக தேவங்கனா தெரிவித்தார்.
இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டபோது, இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்தது. இது இன்னும் கொடுமையானது என தெரிவித்த தேவங்கனா கலிதா, கொரோனாவின் காரணமாக சிறையில் பல விதிகள் மாற்றப்பட்டு இருந்ததாகவும் குறிப்பிட்டார். சிறையில் இருப்பவர்களை பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என யாரும் சந்திக்க முடியாது என்பதே கொடுமையானது என விவரித்தார். சாதாரண நாட்கள் என்றால் சிறையில் இருப்பவர்களுக்காக வீட்டிலிருந்து உணவு, உடை, புத்தகங்களை கொண்டு வரலாம். ஆனால் கொரோனா காலம் என்பதால் பெற்றோரைக் கூட சந்திக்க முடியாத சூழலில் சிக்கினர் தேவங்கனாவும், நடாஷாவும்.

சிறை நட்பு
வெளி உலகில் இருந்து முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில், வெளி உலகத்தின் எந்த சத்தத்தையும் கேட்க முடியாத சூழலில் சவப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டதை போல உணர்ந்ததாக தெரிவித்தார் நடாஷா. ஆனால் தனிமையிலேயே இருப்பது சிறை வாழ்விற்கு நல்லது அல்ல, அங்கே இருக்கும் சூழலோடு ஒத்துப்போக வேண்டும், அப்போதுதான் சிறை வாசத்தை கடத்த முடியும் என தெரிவித்த அவர்கள், சிறையில் இருப்பவர்களோடு நட்பை ஏற்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக வெளியுலக நண்பர்களை சந்திக்கவோ அல்லது அவர்களோடு பேசவோ வாய்ப்பில்லாத சூழலில், உடனிருப்பவர்களே நெருங்கிய நண்பர்களாக மாறியதாக தெரிவித்தார் நடாஷா.
நம்பிக்கை இழந்த நடாஷா & தேவங்கனா
சிறையிலிருக்கும்போது தங்களுக்கு உதவி செய்ய சிறந்த வழக்கறிஞர்களும், பிஞ்ரா டோட் என்ற அமைப்பும் இருந்தது. ஆனாலும் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் 8 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகளுக்கு பிறகும் விடுதலை செய்யப்பட்ட நிகழ்வுகளை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம் என தெரிவித்த தேவாங்கா, எங்களுக்கும் அதைப்போல ஒரு நிலை வரலாம் என நினைத்தாகவும் கூறினார். நாட்கள் செல்ல செல்ல விடுதலையடைவதற்கான நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்ததாகவே தேவாங்காவும், நடாஷாவும் தெரிவித்தனர்.
சிறை கைதிகளுக்கு உதவி
சிறையில் உடனிருந்தவர்கள் குறித்து கூறும்போது, அவர்கள் அனைவரும் நெருங்கிய நண்பர்களாகவே இருப்பார்கள், அவர்களுக்குள் சிறிய சிறிய பிரச்சினைகள் இருந்தாலும், ஒருவருக்கொருவர் துணையாக இருப்பார்கள். குறிப்பாக மற்றவர்களுக்கு தலை முடியை பின்னுதல், லுடோ (Ludo) விளையாடுதல் போன்ற பல செயல்பாடுகளில் ஈடுபடுவதாக தெரிவித்த அவர்கள், கைதிகளிடமிருந்து பல வகையான தலை முடி பிண்ணுவதை கற்றுக்கொண்டதாக தெரிவித்தனர்.

சிறையில் இறுதிநாள்
டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், தேவாங்காவும், நடாஷாவும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். நாங்கள் வெளியில் வந்துவிட்டோம் என்பதை எங்களால் இன்னும் நம்ப முடியவில்லை, ஆனால் மகிழ்ச்சியாக உணர்வதாகவும், சிறை பல மறக்க முடியாத அனுபவங்களை கற்றுக்கொடுத்ததாகவும் தெரிவித்தார் தேவங்கா.