கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் 8க்கும் மேற்பட்ட இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை பொள்ளாச்சி போலீசார் முதலில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 4 பேர் கடந்த 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு மீதான விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட 8 பெண்களும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக சாட்சி அளித்தனர். வழக்கின் ஒவ்வொரு விசாரணையின்போதும் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர்தரப்பு இறுதிவாதம் முடிவடைந்தது. தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு மே 13ம் தேதி அதாவது இன்று அறிவிக்கப்படும் என கடந்த 28ம் தேதி நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். இதற்காக, இந்த வழக்கில் கைதான 9 பேரும் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கில் கைதான 9 பேரும் குற்றாவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.









