“கலைத்துறையில் அரசியல் தலையீடு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழக அரசின் சார்பில் அனைத்து மொழி புத்தகங்களுக்கும் தேசிய அளவில் விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பன்னாட்டு புத்தக கண்காட்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது விழாவில் பேசியவர், “புத்தக வாசிப்புக்காக பல சிறப்பான முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. புத்தக திருவிழாவில் மொழிபெயர்ப்புகள், பதிப்பக பரிமாற்றம் ஆகியவற்றில் முக்கியத்துவம் செலுத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும்.

மொழி என்பது பிரிக்கக்கூடிய சுவர் அல்ல அது உலக மக்களை இணைக்கக் கூடிய பாலம். திமுக ஆட்சியில் 4-வது ஆண்டாக பன்னாட்டு புத்தக திருவிழா சென்னையில் நடத்தப்படுகிறது. கலைத்துறையில் அரசியல் தலையீடு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழக அரசின் சார்பில் அனைத்து மொழி புத்தகங்களுக்கும் தேசிய அளவில் விருது வழங்கப்படும்.

புத்தக வாசிப்பு மூலம் தமிழக இல்லங்களில் அறிவு தீ பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பழமைகளை பொசுக்கி தமிழகத்தை பண்படுத்தியது திராவிட இயக்கம். தொழில் முதலீடு செய்ய மட்டுமல்ல அறிவை பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த மாநிலம் தமிழ்நாடு.
சாகித்ய அகாடமி விருதுகள் மத்திய அரசின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகின் உயரிய சிந்தனைகள் தமிழக மக்களை வந்தடைய வேண்டும். செம்மொழி இலக்கிய விருதுடன் ரூ.5 லட்சம் பணம் பரிசாக வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.