திருச்சியில் ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்!

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லால்குடி அருகே நடந்த கொலை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ராஜாவை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை வ.உ.சி நகர் பகுதியை…

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லால்குடி அருகே நடந்த கொலை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ராஜாவை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார்.  இவரும் ஆதிகுடியை சேர்ந்த ராஜா என்கிற கலைப்புலி ராஜா என்பவரும் நண்பர்களாக இருப்பினும் அவ்வப்போது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவர்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் நேற்று முன் தினம் இரவு நவீன், கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்டோர் லால்குடி மதுபான கடை அருகே குடித்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ராஜா என்கிற கலைபுலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, தனியார் பள்ளி அருகே நவீன் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.  இதில் படுகாயமடைந்த நவீன் குமார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற வழியில் உயிரிழந்தார்.  இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த கொலை வழக்கு சம்பந்தமாக ஆங்கரை பகுதியை சேர்ந்த கலைப்புலி ராஜாவின் நண்பர்களான ஸ்ரீநாத் ,பாலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  மேலும் முக்கிய குற்றவாளியான கலைப்புலி ராஜாவை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் அருகே கலைப்புலி ராஜா தப்பியோட முயன்றபோது போலீசார் ராஜாவை காலில் சுட்டு பிடித்தனர்.  அவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.