ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மர்ம மரணம்: மறு விசாரணை தொடக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்ம மரணம் தொடர்பாக மறு விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில், முக்கிய நபராக கருதப்பட்டவர், முன்னாள் முதலமைச்சர்…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்ம மரணம் தொடர்பாக மறு விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில், முக்கிய நபராக கருதப்பட்டவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ். இவர் கடந்த, 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொண்ட அப்போதைய சேலம் சரக டிஐஜி, செந்தில்குமார், கனகராஜ் சாலை விபத்தில்தான் உயிரிழந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கனகராஜ் சகோதரர் தனபால் உள்ளிட்ட உறவினர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பான வழக்கில் சேலம் மாவட்ட போலீசார் மறு விசாரணையை தொடங்கியுள் ளனர். ஆத்தூர் வடக்குகாடு காந்திநகர் பகுதியில் உள்ள கனகராஜின் உறவினர்கள் வீட்டில் எஸ்,பி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலை விசாரணைக்காக, தனிப்படை போலீசார் அழைத்துள்ளனர். மேலும், எடப்பாடி சமுத்திரத்திலுள்ள தனபாலின் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.