முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவான நிலையில் சிவகாசியில் வசிக்கும் அவரது சகோதரியின் மகன்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன்ஜாமீன் கோரி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை , நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில், மனுதாரரின் பெயரை தவறாக பயன்படுத்திய விஜய் நல்லதம்பி என்பவர்தான் மோசடியில் ஈடுபட்டதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் பண மோசடி புகாரில் 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது உதவியாளர் பலராமன் என்பவர் மூலம்தான் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், விஜய் நல்லதம்பியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என கூறிய காவல்துறை தரப்பு, முன்னாள் அமைச்சருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதால், அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யும் நடவடிக்கைகளை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராஜேந்திர பாலாஜி தலைமறைவான நிலையில் , சிவகாசியில் வசிக்கும் அவர் அக்கா மகன்கள் வசந்தகுமார் மற்றும் ரமணன் மற்றும் கார் ஒட்டுநர் ராஜ்குமார் ஆகிய மூவரையும் நள்ளிரவில் விசாரணைக்கு பிடித்து சென்றனர்.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர் இதுகுறித்து தகவலறிந்த வந்த சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மற்றும் அதிமுகவினர் திருத்தங்கல் காவல் நிலையம் முன்பு திரண்டனர். இதனையடுத்து விசாரணைக்காக 3 பேரையும் விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.