அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்; தொடங்குகிறது முதல் யாகசாலை பூஜைகள்

திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று முதல் யாக சாலை பூஜைகள் தொடங்குகின்றன. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ் பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர்…

திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று முதல் யாக சாலை பூஜைகள் தொடங்குகின்றன.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ் பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்றாகவும், சமயக்குரவர்களால் பாடல் பெற்றதும், அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமி ஆக்கி அபிராமி அம்பாள் திருவிளையாடல் புரிந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் 27ஆம் தேதி காலை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பிரம்மாண்டமான முறையில் யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. யாகசாலை ஏற்பாடுகள் குறித்து தருமபுர ஆதீன 27வது மடாதிபதியை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இன்று நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தருமபுர ஆதீன மடாதிபதி, 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது என்றார். இதனையடுத்து சுவாமி அம்பாள் காலசம்ஹாரமூர்த்தி ஆகியோருக்கு, நவாக்கினி ஹோமம், முருகன் விநாயகர் உள்ளிட்டோருக்கு பஞ்சாக்னி ஹோமம், மற்ற பரிவார தெய்வங்களுக்கு ஏகாக்கினி ஹோமம் ஆகியவை நடைபெறும் என்றும் 120 வேத விற்பன்னர்கள் யாகம் நடத்துவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் 27 திருமுறை ஓதுவார்கள் தேவாரம், திருப்பதிகம் பாடுவார்கள் என்றும், ஒரு லட்சம் மிருத்யுஞ்சய ஜபம் செய்யப்படும் என்றும், 100 பேர் அபிராமி அந்தாதி பாடுவார்கள் என்றும், பொதுமக்களின் பாதுகாப்புக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தருமபுர ஆதீன மடாதிபதி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.