பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி பேசிய , ‘பாலியல் துன்புறுத்தல்’ தொடர்பான விவரங்களை கேட்டு, டெல்லி சட்டம் , ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையர் சாகர் ப்ரீத் ஹூடா தலைமையிலான காவல்துறையினர் குழு, அவரது வீட்டிற்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை பாரத் ஜோடோ என்ற ஒற்றுமை நடைபயண யாத்திரையை மேற்கொண்டார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் தனது பாரத் ஜோடோ யாத்திரையை, ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக் பகுதியில், தேசிய கொடியை ஏற்றி வைத்து நிறைவு செய்தார். அப்போது அங்கு காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய ராகுல் காந்தி, நம் நாட்டில் இன்னும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. ஆங்காங்கு பாலியல் வன்கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. எனது நடைபயணத்தின் போதே பாலியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளான பல பெண்களை சந்தித்தாக கூறியிருந்தார். ராகுல் காந்தி பேசியிருந்த இந்த கருத்து தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களைக் கேட்டு காவல்துறை சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பது, அவருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டிருந்தது.
https://twitter.com/ANI/status/1637315503331966976?s=20
இதனை தொடர்ந்து, காவல்துறையினர் அனுப்பிய நோட்டிஷிற்கு ராகுல் காந்தி பதில் அளிக்காத நிலையில், தற்போது டெல்லி சட்டம் , ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையர் சாகர் ப்ரீத் ஹூடா தலைமையிலான காவல்துறையினர் குழு, அவரது இல்லத்திற்கே நேரில் சென்று இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. அப்போது ராகுல் காந்தியிடம் “பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக அவரை அணுகிய பெண்கள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு” கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க ராகுல் காந்தி வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
விசாரணை முடிந்த பிறகு டெல்லி காவல் சட்ட ஒழுங்கு சிறப்பு ஆணையர் சாகர் ப்ரீத் ஹூடா தெரிவிக்கையில் , “மார்ச் 15- ஆம் தேதி அன்றே ராகுல் காந்தியை தாங்கள் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. தொடர்ந்து பலமுறை முயற்சித்தும், பின்னர் நோட்டீஸ் அனுப்பியும் எதற்கும் பதில் அளிக்காத நிலையில்தான், நேரில் வந்து அவரிடம் விசாரிக்கிறோம். அவரிடம் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை கேட்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என தெரிவித்தார். மேலும் அவரிடம் இருந்து விவரங்களைப் பெற முயற்சித்து வருகிறோம். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க முடியும்” என்று நம்புவதாக ஹூடா கூறியுள்ளார்.
https://twitter.com/ANI/status/1637320089635635200?s=20
ராகுல் காந்தியின் இல்லத்திற்கு போலீசார் சென்றது குறித்து பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “பாரத் ஜோடோ யாத்திரை முடிந்து 45 நாட்கள் ஆகிறது. 45 நாட்களுக்குப் பிறகு டெல்லி போலீசார் விசாரணைக்கு செல்கிறார்கள். இவ்வளவு கவலை என்றால் பிப்ரவரியில் ஏன் அவரிடம் செல்லவில்லை? ராகுல் காந்தியின் வழக்கறிஞர் குழு அதற்கு பதிலளிக்கும் என்று கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவு இல்லாமல், எந்த காரணமும் இல்லாமல் ஒரு தேசியத் தலைவரின் வீட்டிற்குள் நுழைவதற்கு காவல்துறை “அத்தகைய துணிச்சலை” காட்ட முடியாது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துளளார். மேலும் நோட்டிஸ் கிடைத்துள்ளது. அதற்கு பதில் அளிப்பதாக ராகுல் காந்தி கூறி இருந்தும், போலீசார் ஏன் அவரது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா 45 நாட்களுக்கு முன்பு நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் விவரங்களைப் பெற, எந்த விதியின் கீழ், ராகுல் காந்தியின் இல்லத்துக்கு போலீஸார் வந்துள்ளனர் என்று கேள்வி எழுப்பியவர், “பாஜக அரசு எப்போது வேண்டுமானாலும் காவல்துறையை எங்கள் குடியிருப்புகளுக்கு அனுப்பலாம் என்று நினைக்கிறது. பாரத் ஜோடோ யாத்திரையின் போது கூறப்படும் சம்பவங்கள் தொடர்பான கேள்விகளுக்கு விதிகளின்படி பதில் அளிப்போம். பெண்களுக்காக பேச விரும்புகிறார்கள் என்றால் ஹத்ராஸில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? , நாங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துளளார்.
டெல்லி காவல்துறை ராகுல் காந்தி வீட்டிற்கு விசாரணைக்காக வந்திருப்பதை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள், அவரது வீட்டிற்கு வெளியே திரண்டு, காவல்துறைக்கு எதிராக கோஷம் எழுப்பினர். டெல்லி காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து, அனைவரையும் வேனில் ஏற்றி அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா










