ரூட் தல, பஸ் டே பெயரில் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை-மாணவர்களுக்கு காவல் துறை எச்சரிக்கை

ரூட் தல மற்றும் பஸ் டே என்ற பெயரில் வன்முறை மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…

ரூட் தல மற்றும் பஸ் டே என்ற பெயரில் வன்முறை மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை பெருநகரில் உள்ள கல்லூரிகளில் கோடை விடுமுறைக்குப் பின்னர் இளங்கலை 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு 18.07.2022 அன்று கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் சாலையில் கும்பலாகவும், பேருந்துகளில் கானா பாடல்கள் பாடியும், சாகசம் என்ற பெயரில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்பவர்களையும். முக்கியமாக கல்லூரிக்கு தினசரி வந்து செல்லும் பேருந்து மற்றும் இரயில் வழித்தடங்களில் ரூட் தல என்ற பெயரில் வன்முறை மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபடாமல் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கல்லூரி நிர்வாகத்திடம் கலந்தாய்வு மேற்கொண்டு, அவ்வப்போது மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 6 மாதங்களாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னையிலுள்ள கல்லூரிகளுக்கு சென்று, விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, பேருந்து மற்றும் இரயில்களில் குறிப்பிட்ட வழித்தடங்களில் தினசரி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் ரூட் தல என்ற பெயரில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டாலோ, கல்லூரி மாணவர்களிடையே தகராறு அல்லது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டாலோ, கத்தி போன்ற ஆயுதங்களை கல்லூரிக்கு எடுத்து சென்றாலோ காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும், இதனால் வழக்குகளில் சிக்கிய மாணவர்களுக்கு அரசு வேலைகள் கிடைக்காது எனவும், தற்போது நடைமுறையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர்வதற்கு கோரப்படும் காவல்துறை சான்றிதழ்கள் கிடைக்காது எனவும், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல பாஸ்போர்ட் மற்றும் விசா கிடைக்க இயலாது என்றும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், பேருந்து மற்றும் இரயில்களில் சாகசம் என்ற பெயரில் தொங்கியபடி பயணம் செய்வது ஆபத்து என்பது குறித்தும், இதனால் உடல் உறுப்புகள் செயலிழத்தல் மற்றும் உயிரிழப்புகள் நிகழக்கூடும் என அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இவ்வாறு சுமார் 55க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு பல்வேறு முகாம்கள் கல்லூரிகளில் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு, சென்னை பெருநகர காவல் எல்லையில் உள்ள கல்லூரிகளில் வன்முறை மற்றும் தகாத சம்பவங்களில் ஈடுபட்ட மாணவர்களுக்கு காவல்துறை சார்பில், மாணவர்களின் பெற்றோர் முன்னிலையில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு, இனி குற்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டோம் என மாணவர்கள் எழுத்து பூர்வமாக உறுதி அளித்துள்ளனர்.

ஒரு சில சம்பவங்களில் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருந்தது தொடர்பாகவும். ரூட் தல மோதலில் இருவேறு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மற்றும் அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாகவும், பேருந்து மேற்கூரைகளில் ஏறி ரகளையில் ஈடுபட்டது தொடர்பாகவும். கடந்த 10 மாதங்களில் G-3 கீழ்பாக்கம், K-6 டி.பி.சத்திரம், J-3 கிண்டி. E-2 இராயப்பேட்டை, M-1 மாதவரம், கொருக்குப்பேட்டை மற்றும் பெரம்பூர் இரயில்வே காவல் நிலையம் ஆகிய காவல் நிலைய எல்லைகளில், மாணவர்கள் மீது 12 வழக்குகள் பதிவு செய்து, 26க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு. நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து கல்லூரிகளும் திறந்துள்ள நிலையில், அனைத்து கல்லூரிகளுக்கும் தகுந்த காவல்துறை பாதுகாப்புகள் அமைக்கப்பட்டு கண்காணித்து வரப்படுகிறது. மேலும், கல்லூரி மாணவர்கள் செல்லும் முக்கிய பேருந்து மற்றும் இரயில் வழித்தடங்களிலும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வன்முறை அல்லது அடிதடி சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

ஆகவே, ரூட் தல என்ற பெயரில் வன்முறை. மோதல் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள், பஸ்டே என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள். பேருந்து மற்றும் இரயில்களில் சாகசம் என்ற பெயரில் படிகளில் தொங்கியபடியும், பேருந்து மேற்கூரைகளின் மீது ஏறி பயணம் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.