சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்தவர் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம். இவர் முகக் கவசம் அணியவில்லை எனக்கூறி போலீசார் அபராதம் விதித்தபோது,
அத்தொகையை செலுத்த மறுத்ததாகவும், காவலர் உத்தரகுமாரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அப்துல் ரஹீமை கைது செய்த போலீசார் அவரை
கொடுங்கையூர் காவல் நிலையத்தில் தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டியதாக சிசிடிவி மற்றும் வீடியோ காட்சிகள் வெளியானது. இந்த வீடியோ வெளியானதால் பரபரப்பும், கடும் கண்டனங்களும் எழுந்தது.
இதுதொடர்பாக தலைமைக்காவலர் பூமிநாதன் மற்றும் காவலர் உத்தரகுமார் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கொடுங்கையூர் காவல் ஆய்வாளர்கள் நசீமா,
ராஜன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் தாக்கப்பட்டது தொடர்பாக மாநில மனித உரிமை
ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் சிசிடிவி பதிவுகளை பாதுகாக்குமாறு சென்னை காவல் ஆணையருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement: