காதல் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன் மற்றும் மாமியார் கைது!

குடும்ப தகராறில், காதல் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற புகாரின் அடிப்படையில் கணவர், அவரது சகோதரர் மற்றும் மாமியார் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். தீக்காயங்களுடன் இளம்பெண்…

குடும்ப தகராறில், காதல் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற புகாரின் அடிப்படையில் கணவர், அவரது சகோதரர் மற்றும் மாமியார் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். தீக்காயங்களுடன் இளம்பெண் அகிலாண்டேஸ்வரி ஆபத்தான நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் மகாபிரபு. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை கல்மேடு பகுதியைச் சேர்ந்த அகிலாண்டேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன் பிறகு மகாபிரபுவின் சொந்த ஊரில் குடும்பத்துடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த தம்பதிக்கு ஒரு வயது மற்றும் நான்கு மாதத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

மகாபிரபுவிற்கு ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் உள்ளனர். அண்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார். மகாபிரபு மற்றும் அவரது தம்பி அரவிந்த்குமார் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அண்ணன் கைதான கொலை வழக்கில் சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வெளியில் வந்துள்ளனர்.

இதற்கிடையே, மகாபிரபு எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றித்திரிந்ததால் அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி கணவரை கண்டித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மகாபிரவுடன் சேர்ந்து அவரது சகோதரர் அரவிந்த்குமார் மற்றும் அவரது தாய் ராமுதாயும் அகிலாண்டேஸ்வரியை கொடுமை படுத்தியுள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று அகிலாண்டேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது, அகிலாண்டேஸ்வரியின் உடலில் தீ பற்றி எரிந்துக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கணவன், கணவனின் தம்பி மற்றும் மாமியார்

உடனடியாக அவரை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். முதலுதவிக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கணவர் மகாபிரபு அவரது தாய் மற்றும் தம்பியை தேடி வந்ததோடு அகிலாண்டேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.

இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. சம்பவத்தன்று மாமியார் ராமுத்தாய், அகிலாண்டேஸ்வரி மீது மண்ணெண்ணெய் ஊற்றியதாகவும் பிறகு அவர் மீது கணவர் மகாபிரபு தீயை பற்ற வைத்ததாகவும் மைத்துனர் அரவிந்த்குமார் அகிலாண்டேஸ்வரி தப்பிச் செல்ல முடியாத வகையில் வீட்டின் கதவை அடைத்து வைத்ததாகவும் அகிலாண்டேஸ்வரி பகீர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இதன் அடிப்படையில் மூவரையும் கைது செய்த போலீசார் நிலக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அகிலாண்டேஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு குடும்பமே சேர்ந்து வாழ வந்த பெண்ணை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.