என் சாவுக்கு காரணம் என் மனைவியும், அம்மாவும்தான் என வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவிட்டு அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த செல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலசங்கர்(35). இவர் சேத்தூர் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று தென்னங்குடியில் உள்ள ஏரிப்பகுதியில் இவர் மயங்கிய நிலையில் இருப்பதாக திருநள்ளாறு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடற்கூறு ஆய்விற்காக பாலசங்கரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அவரது தம்பி வினோத்கிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உயிரை மாய்த்துக் கொள்ளுஇம் முன் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஆசிரியர் பாலசங்கரின் வீடியோ பதிவு ஒன்று வைரலாகியுள்ளது. அதில், “நான் பாலசங்கர் பேசுகிறேன், எங்கள் வீட்டில் யாரும் சரியில்லை, நான் எவ்வளவு சம்பாதித்துக்கொடுத்தேன் என்று எல்லோருக்கும் தெரியும். என் சாவுக்கு காரணம் என் மனைவி மற்றும் அம்மாதான். செத்துவிட்டேன் என்றால் அவர்களை சும்மா விடாதீங்க. தயவு செய்து நடவடிக்கை எடுக்கவும். எனக்கு அவ்வளவு ஆதங்கம் இருக்க, ஆனால் எதையும் சொல்ல விரும்பவில்லை” என பேசிய வீடியோ பதிவை வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.







