இருசக்கர வாகனத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு அதில் கிடைத்த வருமானத்தின் மூலம் திரைப்படம் எடுத்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் பங்காளத்தெருவை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மனைவி
பூமாரி என்ற முத்துமாரி (57. இவர் கடந்த மாதம் 15ஆம் தேதி இரவு தனது வீட்டின்
முன்பு அமர்ந்து இருந்த போது, பைக்கில் வந்த இருவர் பூமாரி கழுத்தில்
அணிந்து இருந்த 12 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்.
அதேபோல் கோவில்பட்டி ஏ.கே.எஸ் தியேட்டார் சாலையில் நடந்து சென்ற
கதிரேசன் கோவிலைச் சேர்ந்த வெள்ளாத்தாய் (44) என்பவரிடம் பைக்கில் வந்த 2 மர்ம
நபர்கள் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பிச்சென்றனர். இந்த 2 வழிப்பறி
சம்பவங்கள் குறித்து கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலைய போலீசார்
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் 2 இடங்களில் பதிவாகி
இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் தொடர்புடையவர்களை தேடி வந்தனர்.
இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி,
பச்சையங்கோட்டை காந்தி நகரை சேர்ந்த பீருஷா மகன் சனாபுல்லா(42), அவரது மனைவி
ரசியா(38), மகன் ஜாபர் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள 3 பேரும் மகாராஷ்டிரா மாநிலத்தினை பூர்வீமாக
கொண்டவர்கள். தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.
குடும்பத்தினர் ஒன்றிணைத்து திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக
கூறப்படுகிறது. தந்தையும், மகனும் பைக்கில் சென்று வழிப்பறி, திருட்டில்
ஈடுபட்ட நகைகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.
அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் சனாபுல்லா,”நான் அவன் தான்” என்ற திரைப்படம் எடுத்து உள்ளதாகவும், அதனை விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்த நிலையில் கோவில்பட்டியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த திரைப்படத்தில் சனாபுல்லா முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







