பிரதமர் மோடியின் 100-வது மன்கீ பாத் நிகழ்ச்சி கேட்காததால் 36 மாணவிகள் ஒரு வாரத்திற்கு கல்லூரி விடுதியை விட்டு வெளியேறக் கூடாது என தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘மனதின் குரல்’ என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி அன்று பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழச்சி மாநிலம் முழுவதும் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
இதனை பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கேட்டு மகிழ்ந்தனர். மேலும் இந்தியா மட்டுமின்றி ஐநா தலைமையகத்திலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மோடி உரையை கேட்கும் வகையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நிலையில், சண்டிகரில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான, பிஜிமர் தேசிய நர்சிங் கல்வி மையத்தில், பிரதமர் மோடியின் 100-வது ‘மன்கீ பாத்’ நிகழ்ச்சி ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கல்லூரியில் படிக்கும் முதலமாண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் கண்டிப்பாக இந்த ஒலிபரப்பு நிகழ்ச்சியை கேட்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. கலந்து கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
ஆனாலும், முதலாமாண்டில் இருந்து 28 மாணவிகளும், மூன்றாம் ஆண்டில் இருந்து எட்டு மாணவிகளும் என மொத்தம் 36 மாணவிகள் அந்த ஒலிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்கு கல்லூரி விடுதியை விட்டு வெளியேறக் கூடாது என தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் நிகழ்ச்சியை கண்டிப்பாக கேட்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கூறியிருந்த நிலையில், நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்து ஒழுக்கக் கேடான முறையில் நடந்துகொண்டதாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . பிஜிமர் தேசிய நர்சிங் கல்வி மையத்தின், இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








