கொரோனா பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுடன் ஜூலை 16ல் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடலை மேற்கொள்ள உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியைக் கடந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, அருணாசல பிரதேசம், மிசோரம் ஆகிய மாநில முதலமைச்சர்களுடன் இன்று பிரதமர் கலந்தாலோசனையை மேற்கொண்டார். அதில், “கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து தளர்வுகள் பல அமல்படுத்தப்பட்டன. இதனையடுத்து மலைவாழ் இடங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சமூக இடைவெளியின்றி குவிவதாலும், முகக்கவசம் அணியாமல் இருப்பதாலும் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது.” என்று எச்சரித்தார்.
மேலும், “கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு இதுவரை 23 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ஜூலை 16ல் தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக கலந்தாலோசனை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால், 4,10,784 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





