முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் இந்தியாவில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
விவாடெக் தொழில்நுட்ப கருத்தரங்கில், வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர், கொரோனா பெருந்தொற்று, இந்தியாவின் பல்வேறு துறைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியதை பார்க்க முடிந்ததாகக் குறிப்பிட்டார்.
எனினும், அது விரக்தியை அளிக்கும் அளவுக்கு செல்லவில்லை என்றும் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள் ள பாதிப்புகளை சரி செய்யவும், புதிய வாய்ப்புகளுக்கு தயார்படுத்திக் கொள்ளவும் இந்திய தொழில்துறை கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் முதலீடுகளைச் செய்ய உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த பிரதமர், முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும் நாடாக இந்தியா திகழ்வதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, திறமைமிக்க மனிதவளம், மிகப் பெரிய சந்தை, முதலீடு, சுற்றுச்சூழல், கலாச்சாரம் ஆகிய ஐம்பெரும் தூண்கள், எந்த ஒரு நிறுவனமும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உள்ளதாகத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த சாதகமான அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்ள இந்தியாவில் முதலீடு செய்யுமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.







