பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிராக வங்கதேசத்திற்கு சென்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மக்களிடம் வாக்கு சேகரித்ததாகவும், அதனால் அவர் விசா ரத்து செய்யப்பட வேண்டும் என முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27ஆம் தேதி முடிந்துள்ளது. அதில் 79 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசத்திற்கு சென்று மேற்கு வங்கம் குறித்து பேசியது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானது என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டினார். கரக்பூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது அவர் இதனை பேசியுள்ளார்.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வங்கதேசத்தைச் சேர்ந்த நடிகர் ஒருவர் திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டபோது, பாஜக அரசு, இதே தேர்தல் நடத்தை விதிமுறை காரணம் காட்டி, வங்தேசத்து அரசிடம் பேசி அவர் விசாவை ரத்து செய்தது.
ஆனால் மேற்கு வங்கத்திற்கு தேர்தல் நடந்து கொண்டிருக்கு இந்த காலத்தில, பிரதமர் நரேந்திர மோடி மட்டும், வங்கதேசத்திற்கு சென்று ஒரு பிரிவு மக்களிடம் வாக்கு சேகரித்தார். ஏன் அவர் விசா ரத்து செய்யப்படவில்லை எனக் கேள்வியெழுப்பிய மமதா பானர்ஜி, இதுகுறித்து தாம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பதாகவும் தெரிவித்தார்.







