இந்த முறை ஆட்சி அமைக்கப் போவது இந்தியா கூட்டணி தானே தவிர மோடி அல்ல என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கடந்த மே 7-ம் தேதி இதுகுறித்து விசாரணை நடைபெற்றது. அப்போது, இடைக்கால ஜாமீன் வழங்கினால் அரசு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட முடியாது என உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் தெரிவித்தது. அதற்கு அவரும் கையெழுத்திட மாட்டார் என உறுதியளித்தனர்.
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை 44 பக்க பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றம் தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை ஒத்திவைத்தது. இதையடுத்து, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜூன் 1-ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும் ஜூன் 2-ம் தேதி ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :
“நான் தேர்தலுக்கு முன்பாக விரைவில் சிறையில் இருந்து வருவேன் என்று கூறினேன். அதன்படியே வந்துள்ளேன். கடவுளின் அருள் நம்முடன் உள்ளது. நமது கட்சி சிறிய கட்சி. மிகவும் இளமையான கட்சி. நம் தலைவர்கள் பலரை பாஜக சிறைக்கு அனுப்பினர். ஆம் ஆத்மி கட்சியை பாஜக அழிக்க நினைக்கிறது. குறிப்பாக பிரதமர் மோடி, ஆம் ஆத்மி கட்சியை நசுக்கப் பார்க்கிறார்.
பிரதமரின் ஒரே குறிக்கோள் ‘ஒரு நாடு ஒரு தலைவர்’ என்பது தான். அதனால் தான் பிற கட்சி தலைவர்களை சிறைக்கு அனுப்பும் நடவடிக்கையை விசாரணை அமைப்புகள் மூலம் நடத்தி வருகிறார். மேலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி செய்யும் எதிர்க்கட்சிகளின் அமைச்சர்களை சிறைக்கு அனுப்பும் நடவடிக்கையை பாஜக அரசு செய்து வருகிறது.
பிரதமர் மோடி ஏற்கனவே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களின் அரசியல் வாழ்வை முடித்தவர். மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தால் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அரசியல் வாழ்க்கையை முடித்துவிடுவார். பல்வேறு பாஜக மூத்த தலைவர்களின் அரசியல் வாழ்வுக்கு ஓய்வு அளித்த மோடி விரைவில் 75 வயதை எட்டுகிறார். அப்படியெனில் மோடி ஓய்வு பெறுவாரா பாஜகவில் 75 வயது என அரசியல் பதவிக்கு வரம்பு நிர்ணயம் செய்த மோடி அதனை பின்பற்றுவாரா?
இம்முறை I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைக்கும், மோடி அல்ல. பிரதமர் பதவியோ, முதலமைச்சர் பதவியோ எனக்கு ஒரு பொருட்டல்ல. இம்முறை பாஜக 220 – 230 இடங்களில் மட்டுமே வெல்லும். ஆட்சி அமைக்கப்போவது I.N.D.I.A. கூட்டணி தானே தவிர நரேந்திர மோடி அல்ல.”
இவ்வாறு அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்தார்.








