ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்கா செல்கிறார்.
ஐ.நா. பொது சபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அமெரிக்கா செல்கிறார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கெனவே அமெரிக்காவில் இருக்கும் நிலையில் பிரதமருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லாவும் செல்கின்றனர்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கொரோனா தடுப்பு தொடர்பான மாநாடு இன்று நடக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோபைடன் நடத்தும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தொடர்ந்து ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரை அவர் நாளை சந்திக்கிறார். பின்னர் அமெரிக்க தொழிலதிபர்களுடன் கலந்துரையாடும் பிரதமர், இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்க இருக்கிறார்.
பின்னர், துணை அதிபர் கமலா ஹாரிஸை பிரதமர் மோடி நாளை சந்தித்துப் பேசுகிறார்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள்இணைந்து குவாட் என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. சர்வதேச அரங்கில் சீனாவை எதிர்கொள்ள இந்த கூட்டமைப்பு ஒருங்கிணைந்து செயல்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நாளை மறுதினம் குவாட் மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான், ஆஸ்திரேலிய பிரதமர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் தீவிரவாத ஒழிப்பு, பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.







