பொது முடக்கம் என்பதே கடைசி ஆயுதம் : பிரதமர் மோடி

கொரோனாவுக்கு எதிரான போரில், பொது முடக்கம் என்பது கடைசி ஆயுதமே என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில்,கொரோனா 2-வது அலை புயல் வேகத்தில் பரவி வருவதாகவும்,…

கொரோனாவுக்கு எதிரான போரில், பொது முடக்கம் என்பது கடைசி ஆயுதமே என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில்,கொரோனா 2-வது அலை புயல் வேகத்தில் பரவி வருவதாகவும், இந்த தருணத்தில் முன்கள பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியா மீண்டும் கொரோனாவுக்கு எதிராக போரினை எதிர்கொண்டுள்ளதாகவும், இந்த நேரத்தில் நம்பிக்கையுடன் அதனை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்நிலையில் மருத்துவமனைகளில் அதிகரித்துள்ள ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், கொரோனா மருந்துகளை அதிக அளவு உற்பத்தி செய்ய மருந்து நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உலகத்திலேயே இந்தியாவில்தான் குறைந்த விலையில் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுவதை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தடுப்பு மருத்து தயாரிப்பில் அதிர்ஷ்டவசமாக இந்தியா வலுவாக உள்ளதாகவும், இதன்காரணமாகவே இதுவரை 12 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதையும் பெருமிதத்துடன் தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி தொடர்ந்து இலவசமாக செலுத்தப்படும் என்று தெரிவித்த பிரதமர்,
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் மாநிலத்திலேயே தடுப்பூசி செலுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து தடுப்பூசி உற்பத்தியில் 50% மாநிலங்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்படும் என்றும், நோய் பாதிப்பு உள்ள இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் கடந்த ஆண்டு இருந்த மோசமான சூழ்நிலை இரண்டாம் கொரோனா அலையில் இல்லை
மக்கள் அனைவரும் கவனமாக இருந்தால் ஊரடங்கு தேவைப்படாது என்ற அவர் பொது முடக்கம் என்பது கடைசி ஆயுதமே என்றும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.