தமிழக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புனேவிலிருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த 6 லட்சம் தடுப்பூசிகள், சென்னை டி.எம்.எஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகளை ஆய்வு செய்த பின், அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 48 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். தமிழக மருத்துவமனைகளில், ஆக்சிஜன் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும், அடுக்கம்பாறையில் 7 பேர் பலியான சம்பவத்திற்கு , ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமில்லை என்றும், திட்டவட்டமாக தெரிவித்தார்.
தடுப்பூசி குறித்து அதிகளவில் வதந்தி பரவுவது வாடிக்கையாக உள்ளது என்றும், இருப்பினும் பொதுமக்கள் ஆர்வமுடன், தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருவதாகவும் கூறினார். தமிழகத்தில் 4787 தடுப்பூசி மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுமே சிறப்பானவை தான், என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.







