44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அடுத்த மாதம் 28ம் தேதி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் தொடங்க இருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை முன்னிட்டு, செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல்முறையாக ஜோதி தொடர் ஓட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கான அனுமதியை சர்வதேச செஸ் கூட்டமைப்பு வழங்கியதை அடுத்து, ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய அனுராக் தாகூர், மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 188 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளதாகக் குறிப்பிட்டார். ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமே நடைபெறும் ஜோதி தொடர் ஓட்டம், முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட்டில் நடைபெறுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நடைமுறை இந்தியாவில் இருந்து தொடங்குவது நமது நாட்டிற்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம் என்றார்.
இதனையடுத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, செஸ் என குறிப்பிடப்படும் சதுரங்க விளையாட்டு நமது முன்னோர்கள் கண்டுபிடித்தது என குறிப்பிட்டார். இந்த விளையாட்டை விளையாடும் சிறுவர்கள், பிரச்னைகளுக்குத் தீர்வைத் தரும் திறமை மிக்கவர்களாக திகழ்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 8 ஆண்டுகளில் செஸ் விளையாட்டில் இந்தியா மிகப் பெரிய வளர்ச்சியை கண்டிருப்பதாகத் தெரிவித்த நரேந்திர மோடி, இந்திய இளைஞர்கள் தற்போது எல்லா விளையாட்டிலும் சிறந்து விளங்குவதாக பாராட்டு தெரிவித்தார்.
வரும் 2024ல் நடைபெற இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கும், 2028ல் நடைபெற இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் இந்திய அரசும் விளையாட்டு வீரர்களும் தயாராகி வருவதாகத் தெரிவித்த நரேந்திர மோடி, இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்திற்கு விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.