குழந்தைத் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா மீது ஆய்வு மேற்கொண்டு வரும் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆகவும், பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கான குறைந்தபட்ச வயது 18 ஆகவும் உள்ளது.
பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படுவதால், அவர்களால் சொந்த காலில் நிற்க முடியாத நிலை உள்ளது. அதோடு, பிரசவத்தின் போது தாய் இறக்கும் விகிதத்தையும், குழந்தை இறக்கும் விகிதத்தையும் குறைக்கும் நோக்கிலும், அவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்யவும், ஆண்-பெண் குழந்தைகளின் எண்ணிக்கையில் காணப்படும் ஏற்றத்தாழ்வை போக்கும் நோக்கிலும் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு சட்டம் இயற்ற முடிவெடுத்து, இதற்கான மசோதா கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
இந்த மசோதாவை பரிசீலித்து வரும் கல்வி-பெண்கள்-குழந்தைகள்-இளைஞர்கள்-விளையாட்டு துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரான வினய் சஹஸ்ட்ரபுத்தியின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டதாலும், புதிய தலைவர் இன்னும் நியமிக்கப்படாதாலும் இந்த நிலைக்குழுவின் காலம் ஜூலை 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாநிலங்களவை துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு பிறப்பித்துள்ளார்.











