பிரதமரின் பயணத்தின் திட்டத்தில் எவ்வித பாதுகாப்பு குறைபாடுகளும் ஏற்படவில்லை என பஞ்சாப் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வந்தார்.
ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தில் பேரணியை தொடக்கிய வைப்பது பிரதமரின் பயண திட்டமாகும். பதிண்டா விமான நிலையத்தில் காலை வந்திறங்கிய பிரதமர், ஹெலிகாப்டரில் தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்வதாக இருந்தது. மோசமான வானிலை காரணமாக ஏறத்தாழ 20 நிமிடம் காத்திருந்தார். தொடர் மழை மற்றும் மேகக்கூட்டங்கள் அதிகம் இருந்த காரணத்தினால் சாலை வழியான பயணத்திற்கு பிரதமர் தயாரானார்.
பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட்ட பின்னர் சாலை வழியான பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தியாகிகள் நினைவிடத்திற்கு சுமார் 30 கி.மீ தொலைவில் ஒரு மேம்பாலத்தில் போக்குவரத்து ஸ்தம்பிப்பால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சாலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் காரணமாக பிரதமரின் பயணம் சுமார் 20 நிமிடம் தாமதமாகியுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு மீறல் காரணமாக பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், போதுமான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பஞ்சாப் முதலமைச்சர் சரன்ஜித் சிங் சன்னி, “பிரதமரின் திட்டத்தில் எவ்வித பாதுகாப்பு குறைபாடுகளும் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த பயண திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு வருந்துவதாகவும், பிரதமரை மதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையம் செல்ல இருந்ததாகவும், ஆனால் தன்னுடன் இருந்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சமீபத்திய சோதனையில் தெரியவந்ததையடுத்து தன்னால் பிரதமரை நேரடியாக சென்று வரவேற்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மட்டுமல்லாது மோசமான வானிலை மற்றும் போராட்டம் காரணமாக பிரதமரின் பயண திட்டத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியதாகவும் சரன்ஜித் தெரிவித்துள்ளார். அதேபோல பிரதமரின் பயண திட்டத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இப்பயணத்தில் பாதுகாப்பு குறைபாடுகளும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் விவசாயிகளின் போராட்டம் காரணமாகவே மேம்பாலத்தில் காத்திருந்ததாக தகவல்கள் வெளிவந்த நிலையில், இது குறித்து விளக்கமளித்த சரன்ஜித், “விவசாயிகள் கடந்த ஓராண்டாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் திரும்பப்பெறுவது குறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. போராட்டமும் திரும்பப் பெறப்பட்டது. ஆனால் இன்று திடீரென போராட்டக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். விவசாயிகள் மீது நாங்கள் தடியடியை பிரயோக்கிக்க மாட்டோம்.” என்று கூறியுள்ளார்.
அதேபோல பாதுகாப்பு குறைப்பாடுகள் ஏதும் ஏற்படவில்லையென்றும் அப்படி ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் சரன்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.








