“உயிருடன் திரும்ப முடிந்ததற்கு நன்றி” – பிரதமர் மோடி

பாதுகாப்பு குறைப்பாடுகள் காரணமாக பஞ்சாப்பில் பேரணியை பங்கேற்காமல் திரும்பிய பிரதமர் மோடி, உயிருடன் திரும்ப முடிந்ததற்கு முதலமைச்சர் சரன்ஜித் சிங் சன்னிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5…

பாதுகாப்பு குறைப்பாடுகள் காரணமாக பஞ்சாப்பில் பேரணியை பங்கேற்காமல் திரும்பிய பிரதமர் மோடி, உயிருடன் திரும்ப முடிந்ததற்கு முதலமைச்சர் சரன்ஜித் சிங் சன்னிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார்.

ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தில் பேரணியை தொடக்கிய வைப்பது பிரதமரின் பயண திட்டமாகும். பதிண்டா விமான நிலையத்தில் காலை வந்திறங்கிய பிரதமர், ஹெலிகாப்டரில் தியாகிகள் நினைவிடத்திற்கு செல்வதாக இருந்தது. மோசமான வானிலை காரணமாக ஏறத்தாழ 20 நிமிடம் காத்திருந்தார். தொடர் மழை காரணத்தினால் சாலை வழியான பயணத்திற்கு பிரதமர் தயாரானார்.

பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட்ட பின்னர் சாலை வழியான பயணம் தொடங்கப்பட்டது. இதற்கிடையில் தியாகிகள் நினைவிடத்திற்கு சுமார் 30 கி.மீ தொலைவில் ஒரு மேம்பாலத்தில் போக்குவரத்து ஸ்தம்பிப்பால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சாலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேம்பாலத்தில் காத்திருந்த பிரதமர் மோடி

 

இதன் காரணமாக பிரதமரின் பயணம் சுமார் 20 நிமிடம் தாமதமாகியுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு மீறல் காரணமாக பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், போதுமான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே பிரதமரும் பேரணியை தொடக்கி வைக்காமல் விமான நிலையத்திற்கு திரும்பினார்.

இந்நிலையில், “நான் விமான நிலையத்திற்கு உயிருடன் திரும்பி இருக்கிறேன். உங்கள் முதல்வருக்கு அதற்காக நன்றி சொன்னேன் என சொல்லிவிடுங்கள்” என பத்திண்டா விமான நிலையத்தில் பஞ்சாப் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கூறியுள்ளாதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று அதனை நடத்த முடியாமல் பிரதமர் திரும்பியுள்ளது பஞ்சாப் அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரதமரின் பயணத்தில் எந்தவித பாதுகாப்பு மீறல்களும் ஏற்படவில்லையென்றும், அவர் திரும்பி சென்றதற்காக வருந்துகிறேன் என்றும் பஞ்சாப் முதலமைச்சர் சரன்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.