நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில் முதலில் ஆடிய இந்திய கிரிக்கெட் அணி 184 ரன்கள் குவித்துள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. டி-20 தொடரில், முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையி லான கடைசி மற்றும் மூன்றாவது டி-20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடந்து வருகிறது.
இரவில் பனிப்பொழிவு மிக அதிகமாக இருப்பதால் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் கே.எல்.ராகுலுக்கும் அஸ்வினுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக இஷான் கிஷனும் சாஹலும் களமிறங்கியுள்ளனர். நியூசிலாந்து அணியில் டிம் சவுதிக்கு ஓய்வளிக்கப்பட்டு, பெர்குசான் இணைந்துள்ளார்.
முதலில் ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மாவும் இஷான் கிஷனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கிஷன் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். பின்னர் வந்த ரிஷாப் பண்ட் 4 ரன்களில் பெவிலியன் திரும்ப, ஸ்ரேயாஸ் ஐயரும் வெங்கடேஷ் ஐயரும் சிறிது நேரம் அதிரடி காட்டினர். அவர்கள் ஆட்டமிழந்ததும் கடைசி கட்டத்தில் ஷர்ஷல் படேலும் தீபக் சாஹரும் விளாச, இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்துள்ளது.
ரோகித் 31 பந்துகளில் 56 ரன்களும் ஸ்ரேயாஸ் 25 ரன்களும் வெங்கடேஷ் 20 ரன்களும் தீபக் சாஹர் 21 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் சண்ட்னர் 3விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களத்தில் இறங்கியுள்ளது. அந்த அணியின் மார்டின் கப்திலும் மிட்செலும் ஆடிவருகின்றனர்.









