தனி அமைச்சகம்: முதலமைச்சருக்கு அன்புமணி கோரிக்கை

காற்றாலை, சூரிய ஒளி மின்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்ட புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தித் திறனில்…

காற்றாலை, சூரிய ஒளி மின்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்ட புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தித் திறனில் தமிழ்நாடு மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, வருங்காலத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை, இன்னும் மின்சாரத்துறை அமைச்சகத்தின் ஓர் அங்கமாகவே செயல்பட்டு வருவது அதன் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்காது என சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத புதுப்பிக்கவல்ல மின்சார உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற அவர், மின்துறை அமைச்சகத்தை இரண்டாக பிரித்து நீர் மின்னுற்பத்தி, காற்றாலை மின்னுற்பத்தி, சூரிய ஒளி மின்னுற்பத்தி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதற்காக புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தை புதிதாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மத்திய அரசும், பல மாநிலங்களும் இத்தகைய அமைச்சகத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழக அரசும் இத்தகைய அமைச்சகத்தை ஏற்படுத்தி, புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தியில் பிடித்துள்ள முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தனது அறிக்கையில் அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.