அப்பாவின் கனவுகளை நிஜமாக்கும் திட்டங்களை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்து வருவதாக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக மண்டைக்காடு முதல் சைமன் காலனி வரை உள்ள ஏ.வி.எம். கால்வாய் பகுதிகளைத் தூர்வார திட்ட மதிப்பீடு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு மற்ற பகுதிகளையும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நியூஸ்7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விஜய் வசந்த் தெரிவித்தார்.
மேலும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்கள்தான் ஆகிறது என தெரிவித்த விஜய் வசந்த், தேர்வு நேரம் நெருங்கி வருவதால் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். ஆனால் தமிழக மக்களிடம் கூறியது போன்று நீட் தேர்வை ரத்து செய்ய வலுவாக இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு எது தேவையோ அதற்கு தமிழக காங்கிரஸ் துணையாக இருக்கும் எனவும் உறுதியளித்தார்.








