இந்தியாவை ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா 3வது அலை தாக்கக்கூடும் என மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியைக் கடந்துள்ள நிலையில், தற்போது மூன்றாம் அலை குறித்த எச்சரிக்கைகள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றன. இதன் தொடரச்சியாக இந்தியாவை ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை தாக்கக்கூடும் என ஐசிஎம்ஆரின் தொற்று நோய்கள் பிரிவு தலைவர், சமீரன் பாண்டா தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 2 அலையைக்காட்டிலும் மூன்றாவது அலையானது வீரியம் குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த இரண்டு அலைகளில் மக்களின் நோயெதிர்ப்பு திறன் அதிகரித்திருந்தால் மூன்றாவது அலையை பொருட்படுத்தத் தேவையில்லை என்றும், அவ்வாறு இல்லையெனில் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். வேகமாகவும் பரவும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மாநிலங்கள் தற்போது கடைப்பிடித்து வருகின்ற கட்டுப்பாடுகளை நிரந்தரமாக தளர்த்துமேயானால் மூன்றாவது அலையின் பாதிப்புகள் கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இதுவரை 3,09,87,880 ஆக உயர்ந்துள்ளது. 4,32,041 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3,01,43,850 பேர் குணமடைந்துள்ளனர். 4,11,989 உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








