’முதலீட்டை 3 மடங்கு அதிகரிக்க திட்டம்’ – அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் முதலீட்டை, மூன்று மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் 12வது…

அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் முதலீட்டை, மூன்று மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் 12வது நிதிநிலை மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகாராஜன் கலந்து கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் முதலீட்டை, மூன்று மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். கடந்த 18 மாதங்களில் 10 பில்லியன் டாலர் முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தொழில் தொடங்க உகந்த மாநிலமாக 14வது இடத்தில் இருந்த தமிழகத்தை, மூன்றாவது
இடத்திற்கு முன்னேற்றி உள்ளோம். கடந்த 18 மாதங்களில் கொரோனா பெருந்தொற்று போன்றவைகளை சமாளித்து பொருளாதாரத்தை சீராக வைத்துள்ளோம். நம்முடைய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இருக்கிறது. அதில் வேலை வாய்ப்புகள் அதிகம் உருவாக்கப்படுகிறது.

வங்கி முதலீட்டில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக இந்திய அளவில் மட்டுமின்றி, தமிழகத்திலும் ஜிடிபியின் வளர்ச்சி வேகம் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு தகுந்த நிதிநிலைமை நடவடிக்கைகளை எடுத்ததால், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.