தமிழ்நாட்டில் விரைவில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு – மத்திய இணை அமைச்சர்

தமிழ்நாட்டில் விரைவில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கப்பட உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தேலி தெரிவித்துள்ளார்.   மத்திய பெட்ரோலியம், எரிவாயு, தொழிலாளர் நலன் துறைகளின் இணையமைச்சர் ராமேஸ்வர் தேலி சென்னை…

தமிழ்நாட்டில் விரைவில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கப்பட உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தேலி தெரிவித்துள்ளார்.

 

மத்திய பெட்ரோலியம், எரிவாயு, தொழிலாளர் நலன் துறைகளின் இணையமைச்சர் ராமேஸ்வர் தேலி சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கெயில் நிறுவனம் மூலம் குழாய் வழியாக வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு முந்தைய அதிமுக அரசு அனுமதி வழங்காததால் திட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், ஆனால் தற்போது திமுக அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

 

முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
அடுத்தடுத்த கட்டங்களில் முழுமையாக அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குழாய் வாயிலாக விநியோகிக்கப்படும் எரிவாயுவின் விலை குறைவாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் புதிதாக பெட்ரோல் பங்குகள் தொடங்க அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும், புதிதாக பெட்ரோல் பங்குகள் தொடங்க உரிமம் வேண்டி விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் எரிவாயு நிரப்பிக்கொள்ளும் வசதியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பெட்ரோல் மாசைக் குறைக்க 20% எத்தனால் கலந்து இனி பெட்ரோல் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

 

தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் ESI மருத்துவமனைகள் அமைய உள்ளதாகவும், சென்னை எண்ணூர் – தூத்துக்குடி துறைமுகம் இடையே ரூ.6,000 கோடி மதிப்பில் எரிவாயு குழாய் அமைக்கும் பணி செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் மத்திய இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலி தெரிவித்துள்ளார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.