பிங்க் நிற ஆட்டோ திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக 100 பிங்க் நிற ஆட்டோக்கள்,150 மஞ்சள், நீல நிற ஆட்டோக்களை பெண்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த திட்டத்தில் பெண்கள் ஆட்டோக்கள் வாங்க தமிழக அரசு தலா 1 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குகிறது.

மேலும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் சென்னையில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதுடன், பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது. இந்த ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.