கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த உடற்கல்வி வகுப்புகளை மீண்டும் நடத்த பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டு காலமாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. முதற்கட்டமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவியதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020ம் ஆண்டு தொடர்ந்து பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளில் மாணவர்கள் உடற்கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனா 3ம் அலை கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடர்ந்து 2022 ஜனவரி வரை பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து தமிழ்நாட்டில் தற்போது தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்துள்ளது.
கொரோனா தொற்றால் 2 ஆண்டுகள் உடற்கல்வி பாடவேளை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு பாடவேளை ஒதுக்க பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மட்டும் உடற்கல்வி பாடவேளையை அமல்படுத்த வேண்டும் என்றும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராவதால், அவர்களுக்கு உடற்கல்வி பாடவேளை இல்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.







