முறைகேடு செய்து நகைக்கடன் பெற்றவர்களுக்கும் தள்ளுபடி செய்யச் சொல்கிறீர்களா என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று நகைக்கடன் தள்ளுபடி செய்யும் விவகாரம் குறித்து காரசார விவாதம் நடைப்பெற்றது. அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தகுதியான 14 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தபடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தகுதியுடைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சிக்கு வந்தால் தள்ளூபடி செய்வீர்கள் என்று நம்பித் தானே மக்கள் வாக்களித்தனர் என கூறினார். அப்போது மீண்டும் குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முறைகேடுகளில் ஈடுபட்டு நகை கடன் பெற்றவர்களுக்கும் தள்ளுபடி செய்ய சொல்கிறீர்களா? என்றும் முறைகேடுகள் நடந்ததை எதிர்கட்சி தலைவர் ஆதிரிக்கிறாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, முறைகேடுகள் நடந்ததை ஆதரிக்கவில்லை என்றும், முறைகேடுகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது சரியானதுதான் என்றும் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தகுதியானவர்கள் உரிய ஆதாரத்துடன் அணுகினால், அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.