ஜல்லிக்கட்டில் விதிகளை மீறியதாக கூறப்படுவதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என கூறி வழக்கை நவம்பர் 29ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்பு மற்றும் விலங்கின ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தன.
விலங்குகள் நல அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார் லூத்ரா, ஜல்லிக்கட்டு, கம்பாலா, ரேக்ளா போன்றவற்றை நடத்தும் தமிழகம், கர்நாடகா, மகாராஷ்ட்ரா மாநிலங்களில் உள்ள சட்டம், மிருகங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கையாளவோ, தடுப்பதாகவோ இல்லை என குற்றம்சாட்டினார். மேலும் அவற்றுக்கான ஆவணங்களையும், புகைப்படங்களையும் தாக்கல் செய்தார்.
இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ஆட்சேபம் தெரிவித்ததுடன், விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் எவ்வித ஆய்வும் செய்யாமல் தாக்கல் செய்த ஜல்லிக்கட்டு தொடர்பான புகைப்படங்களை ஏற்கக்கூடாது என வாதிட்டார். விலங்குகள் நல அமைப்பு சார்பில் தொடர்ந்து வாதங்களை வைத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, ஜல்லிக்கட்டு போன்றவற்றில் மனித உயிர்கள் பறிபோவதாக எடுத்துரைத்தார். அதற்கு நீதிபதிகள், குத்துச்சண்டையில் கூட மனித உயிர்கள் பறிபோகின்றன என்றார்.
இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, கலாச்சார உரிமை, பண்பாட்டு உரிமை என்ற காரணத்தை வைத்து அரசியல் சாசனத்துக்கு எதிரானவற்றை, முரணானவற்றை அனுமதிக்க முடியுமா? எனக்கூறியதுடன், மாடுகள் துன்புறுத்தப்படுவது, விதிகள் மீறப்படுவது, காயம் ஏற்படுவது உள்ளிட்டவை தொடர்பான பல புகைப்படங்களையும் காட்டினார்.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, இந்த புகைப்படங்களில் பல, எதார்த்தத்தை விட முரணானதாக உள்ளன என்றும், எனவே ஜல்லிக்கட்டு தொடர்பான காணொளியை கண்டால் மட்டுமே அதனை புரிந்து கொள்ள முடியும் எனவும் வாதிட்டார். ஏனெனில் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்கும் மாடுகளுக்கு பல்வேறு தகுதிகள் நிர்ணயம் செய்யப்படுகிறது என்றும், மேலும் உரிய விதிமுறைகளின்படி தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாகவும், இதுபோன்ற புகைப்படங்களை ஏற்கக்கூடாது எனவும் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், இத்தகைய சில புகைப்படங்களை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த விதிமுறைகளும் மீறப்படுகிறது என்ற முடிவுக்கு வர முடியாது என தெரிவித்ததுடன், மேலும் இவை விதிகளை மீறியதாக நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என கூறி ஜல்லிக்கட்டு வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை வரும் நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.







