வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அரசு அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர், ஜவகர் நகர் பகுதியில் வசித்து வருபவர் சத்ய நாராயணன். இவர் தலைமைச் செயலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரிடம் மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். மேலும் அவருடைய செல் போன் எண்ணிற்கு வந்த ஓ.டி.பி எண்ணை கேட்டுள்ளார்.
அதனை நம்பிய சத்திய நாராயணன் ஒ.டி.பி எண்ணை வழங்கியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 1லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக சத்திய நாராயணன் தொலைபேசிக்கு குறுஞ் செய்தி வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ந்து போன சத்திய நாராயணன் உடனடியாக போலீசில் புகாரளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







