அரசு பேருந்தை கடத்திய மர்ம நபர்; மீட்கப்பட்டது எப்படி..?

சென்னை அண்ணா நகர் மணிமனை முன் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை மர்ம நபர் ஒருவர் கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நகரின் முக்கியமான அரசுப் பேருந்து பணிமனைகளில் ஒன்று அண்ணா நகர் பணிமனை. இங்கு…

சென்னை அண்ணா நகர் மணிமனை முன் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை மர்ம நபர் ஒருவர் கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை நகரின் முக்கியமான அரசுப் பேருந்து பணிமனைகளில் ஒன்று அண்ணா நகர் பணிமனை. இங்கு காலைப் பணிக்கு வந்த ஓட்டுநர் ஒருவர், அதிகாலை 4:30 மணி அளவில், சென்னை கோயம்பேட்டில் இருந்து அண்ணாசதுக்கம் வரை செல்லும் தடத்தில் பேருந்தை இயக்குவதற்காக பேருந்தை ஆன் செய்து, பணிமனைக்கு வெளியில் நிறுத்திவிட்டு அருகில் உள்ள டீக்கடையில் டீ குடிக்க சென்று விட்டார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென பேருந்தை கடத்தி சென்றார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் பேருந்தை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்த மர்ம நபர் பேருந்தை வேகமாக இயக்கி அந்த இடத்தை விட்டு தப்பி சென்றார். இதையடுத்து, பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் பேருந்து இருக்கும் இடத்தை தேடிய போது, 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாடி மேம்பாலம் அருகே பேருந்து நிற்பது தெரியவந்தது. உடனடியாக அங்குவிரைந்த ஓட்டுநரும், நடத்துனரும் பேருந்தை மீட்டு வந்தனர்.

இதனிடையே, அண்ணாநகர் பணிமனை அருகே நடைப்பயிற்சி சென்ற ஒருவர், பேருந்து கடத்தப்பட்டது குறித்து, திருமங்கலம் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, பணிமனைக்கு வந்த காவலர்கள் இதுகுறித்து விசாரணை செய்த போது, ஓட்டுநர் புகார் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. எனினும், பேருந்தை சாலையில் விட்டுச் சென்ற மர்ம நபரை, ஓட்டுநர், நடத்துநர் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் போக்குவரத்து துறை ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply