பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

கட்டணம் அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பேரிடர் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 9ம்…

கட்டணம் அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பேரிடர் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 9ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இன்று முதல் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே மாணவர்கள், பெற்றோர் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கூட்டம் சேருவதை தவிர்க்கும் வகையில், தனித்தனி குழுக்களாக மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்படுகின்றனர். அதே பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இதனிடையே, சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது 11ம் வகுப்பில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் அவர்களுக்கான சேர்க்கை ஆணையை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்காளை சந்தித்த அவர், “10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் All Pass – தேர்ச்சி என்று குறிப்பிட்டு வழங்க உள்ளோம். இப்போதைக்கு 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11ம் வகுப்புக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்கு வரும் மாணவர்களை, தக்கவைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கல்வித்துறையில் கடந்த காலங்களில் முறைகேடுகள் நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒருவாரத்துக்குள் சேர்க்கையை முடித்துவிட்டு, பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 1, 6, 9, 11-ம் வகுப்புக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆன்லைன் கல்விக்கான வழிகாட்டு நெறிமுறைகளை முதலமைச்சரிடம் ஒப்படைத்துள்ளோம். விரைவில், அவர் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார். மேலும், கட்டணம் அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நேரடி வகுப்புகளைத் தொடங்குவது பற்றி யோசிக்கவில்லை. ஆன்லைன் கல்வி, கல்வி தொலைக்காட்சி வழியாகவே பாடங்கள் தொடர்ந்து நடத்தப்படும். ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என தெரிவித்தார்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.