பாஜக அலுவலகத்தில் தாக்குதல் நடந்த விவகாரத்தில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் குண்டு வீசியதாக ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த பாஜக நிர்வாகி கராத்தே தியாகராஜன், தமிழ்நாடு பாஜக அலுவலகம் தாக்குதல் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஒருவரை கைது செய்துள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்து உள்ளார். குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்த அவர்,
தேர்தல் பணியை கெடுக்க வேண்டும் என இப்படி செய்துள்ளனர். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். தமிழக அரசு இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். தொடர்ச்சியாக பாஜக அலுவகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனை மத்திய அரசு தொடர்ந்து வேடிக்கை பார்க்காது எனவும், தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வன்முறையை தூண்டும் கருத்துக்களை பேசி வருவதாக தெரிவித்தார்.
மேலும், அண்ணா அறிவாலயத்தில் 100 காவல்துறையினர் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள், எனவே இங்கு பாதுகாப்பு பணி சரிவர மேற்கொள்ளவில்லை என எண்ண தோன்றுகிறது எனவும், பாஜக அலுவலகத்திற்கு அருகில் உள்ள சிசிடிவியை வைத்து காவல் துறையினர் ஆய்வு செய்து வருவதாக கூறுகிறார்கள். பாஜக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி ஆய்வு செய்ய தொழில்நுட்ப குழு வந்ததும், அது ஆய்வு செய்யப்பட்டு பின்னர் நடவடிக்கைக்கு கொடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







