நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஒரு பைசா வாங்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நெல் கொள்முதலின்போது கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு முப்பது ரூபாய் பணம் லஞ்சமாக வாங்கப்படுவதாக செய்தி வந்ததைப் பார்த்து, இதுபோன்று தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார். இது போன்று பணம் பெறுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே, நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு ஆண்டொன்றுக்கு 83 கோடி ரூபாய் அளவுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
மேலும், நெல் கொள்முதல் தொடர்பாக புகார் ஏதுமிருந்தால் அரசு அறிவித்துள்ள கட்டணமில்லாத் தொலைபேசி மூலம் விவசாயிகள் புகார் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அமைச்சர் சக்கரபாணி, இனி யாரேனும் பண வசூலில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







